மகிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக
நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, மகிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு கூடுதல் ஆசனங்களைத் தர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 5 ஆசனங்கள் வீதம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
முன்னதாக, சபையில் உரையாற்றிய தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், சபாநாயகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும், அவர் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும் கூறினார்.
அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர் என்று சபாநாயகரை விளித்து,- மரபுகளுக்கு முரணாக, விமல் வீரவன்ச உரையாற்றியிருந்தார்.
வெளிநடப்புச் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை சபாநாயகர் பின்பற்றும் வரையில், நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே சபாநாயகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்மீது நம்பிக்கையில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றுமாறு சவால் விடுத்துள்ளார்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும். அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசாங்கத் தரப்பு நிறைவேற்றி தமது பெரும்பான்மையை நிரூபித்தால் மகிழ்ச்சியடைவேன்” என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.