வங்கிகளின் செயற்பாட்டால் முல்லைத்தீவில் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு செல்லும் வங்கிப் பிரதிநிதிகள்
மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்குமாறும், பணத்தினை பெற்றோர்களிடமிருந்து கொண்டுவருமாறும் தெரிவிப்பதுடன் அதிக பணத்தினை வைப்பிலிடுபவர்களுக்கு வைப்பிலிடும் பணப் மெறுமதிக்கு ஏற்ப பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்குகின்றனர்.
இதனால் ஏழைச்சிறுவர்கள் மன உளச்சலிற்கு உள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் அதிக பணத்தினை பாடசாலைக்கு வரும் வங்கிப்பிரதிநிதிகளிடம் கொடுத்து அதிக அதிக பரிசு பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல ஏழைச்சிறுவர்கள் ஏக்கத்துடன் வெறுங்கையுடன் வீடு செல்லுகின்றனர்.
பாடசாலைமாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே அனைத்து மாணவர்களுக்கும் வெள்ளை நிற சீருடையை அரசு வழங்குகின்றது. ஆனால் இந்த வங்கிகளின் நடவடிக்கையினாலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாடசாலை சமூகத்தாலும் ஏழை மாணவர்கள் மன உளச்சலிற்கு உள்ளாகி வருவதுடன் ஏழை மாணவர்கள் தமது பெற்றோரிடம் வங்கியில் வைப்பிலிடுவதற்கு பணத்தைக் கேட்கின்ற போது அன்றாட உணவுத்தேவையினைப் பூர்த்தி செய்வதற்கே சிரமப்படும் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.
தற்போது வருட இறுதி என்பதால் வங்கி ஊழியர்கள் தமது இலக்கினை அடைவதற்கு தீவிரமாக செயற்படுகின்றனர் பாடசாலைகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மாணவர்களின் ஆர்வத்தினை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிப்பது நல்ல விடயம்தான். ஆனால் இந்த விடயத்தில் ஏழை மாணவர்களின் உளநலன் பாதிக்கப்பட்டு மனம் உடைந்து போகும் நிலையினை தவிர்க்கும் விதமாக உரிய தரப்பினர் செயற்படுவது எமது சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகக்காணப்படுகின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments

Powered by Blogger.