ஆரோன் ஃபிஞ்ச் இப்படி செய்யலாமா?

ஆட்டத்தில் வெற்றியைத் தேடித் தந்தாலும் அபராதத்தில் சிக்கியுள்ளார் ஆஸ்திரேலியக் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி 20 தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் சமீபத்தில் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட அந்த ஆட்டம் ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர் போட்டியாக மாறியது. இதனால் 158 ரன்களே ஆஸ்திரேலிய அணி சேர்த்திருந்தபோதும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
துவக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி ஓவரில் தேவையாக இருந்த 13 ரன்களை இந்திய அணியால் திரட்ட முடியவில்லை. இதனால் 4 ரன்களில் வெற்றியை ஆஸ்திரேலியாவுக்குக் கொடுத்தது இந்தியா.
வெற்றிக் களிப்பில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது ஐசிசி. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகத் தாமதமாகப் பந்துவீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்குப்படி ஒரு ஓவருக்கான நேரத்தைக் கூடுதலாக செலவு செய்துள்ளது ஆஸ்திரேலியா. இதனால் ஐசிசி போட்டி விதி 2.5.1யின் படி, கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சிற்கு அந்தப் போட்டிக்கான சம்பளத்திலிருந்து 20 சதவிகிதமும் மற்ற வீரர்களுக்குத் தலா 10 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் மீண்டும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் இதுபோல செயல்பட்டால் போட்டியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.