2.0: ஒயரில் சிக்கிய திட்டங்கள்

2.0 - உடன் வியாபாரப் பயணம் - 4
இராமானுஜம்
தமிழ் சினிமா விநியோக வியாபாரம் என்ன, எத்தனை கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தாலும், தமிழகத்தில் அதிகபட்சமாக இதுவரை வெளியான
படங்களுக்கு என்ன வசூல் ஆகியிருக்கிறது, என்ன வசூல் ஆகக்கூடும் என்கிற விவரம் அறிந்தும், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 .0 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க என்ன காரணம்?
லைகா நிறுவனம் தமிழ்த் திரைப்படத் துறையில் முதலீடு செய்யக் காரணமாக இருந்தவர் லண்டன் வாழ் இலங்கை தமிழர் கருணாமூர்த்தி. தமிழ்ப் படங்களை வெளிநாடுகளில் திரையிட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் மட்டும் திரையிடப்பட்ட தமிழ்ப் படங்களை, உலகம் முழுமையும் திரையிடும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், புதிய படங்கள் பூஜை போடப்படும் அன்றே, அப்படங்களின் வெளிநாட்டு உரிமையை விலை பேசி குறிப்பிட்ட தொகை அட்வான்ஸ் கொடுத்து தயாரிப்பாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர் கருணா. இவரது ஆலோசனையின் பேரில் தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கியது லைகா. வெளிநாட்டில் மொபைல் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லைகா தனது நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவில் தொடங்கப் படத் தயாரிப்பின் மூலம் திட்டமிட்டது.
முதல் தயாரிப்பே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தைத் தயாரித்து நஷ்டப்பட்டனர். தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்த பல படங்கள் நஷ்டத்தையே ஏற்படுத்தின. வெளிநாட்டு விநியோகத்தில் வெற்றி பெற்ற கருணாவின் அனுபவம், ஆலோசனைகள் தமிழக விநியோக வியாபாரத்தில் வெற்றியைப் பெற உதவவில்லை.
இந்நிலையில் 2.0 படத்தைத் தயாரிக்க ஷங்கர் லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதன் பட்ஜெட் 350 கோடி என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தது லைகா நிறுவனம். ஏற்கனவே தமிழ்ப் படங்கள் தயாரித்ததில் பெரும் நஷ்டம், வெளிநாட்டில் 3D தொழில்நுட்பக் கருவிகள் வியாபாரத்தில் தேக்க நிலை என்பதை விவரித்து தற்போது 350 கோடி ரூபாய் பட்ஜெட் இயலாது என லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் ஷங்கரிடம் தெரிவித்தார்.
2.0 படத்தை 3D தொழில் நுட்பத்தில் மூன்று மொழிகளில் தயாரிக்கலாம். படம் வெளியீட்டின் போது திரையரங்குக்கு 2 .0 படம் வேண்டும் என்றால் 3D தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அதனை நாங்களே குறைவான விலையில் வழங்குகிறோம் எனக் கூறித் தேங்கிக் கிடக்கும் 3D உபகரணங்களை விற்பனை செய்துவிடலாம் என்ற ஷங்கர் ஆலோசனையை அங்கீகரித்தவர் கருணா.
‘பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதை’ போல 350 கோடி பட்ஜெட் ஷங்கரின் நிர்வாகக் கோளாறு, ரஜினியின் நலமின்மை காரணமாக 600 கோடியாக உயர்ந்துவிட்டது.
‘லாபம் வேண்டாம். அசல் வந்தால் போதும்’ என்று சுபாஷ்கரன் கூற, அதற்கு நான் பொறுப்பு என கருணா கூறியிருக்கிறார். தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் வியாபாரத்தை முடிக்க கருணா முயற்சித்தும் முடியவில்லை. வேறு வழியின்றி தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டு 2.0 படத்தை ரிலீஸ் செய்யக் காத்திருக்கிறார் லைகா ஆலோசகர் கருணாமூர்த்தி.

No comments

Powered by Blogger.