சாய் தீபம்!

சாய்பாபாவுக்கு என்ன செய்தால் பிடிக்கும்? இப்படி ஒரு கேள்வியை அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்துக்கு வந்த பக்தர் ஒருவர் இன்னொரு பக்தரிடம் எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கான பதிலை பக்தர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். பாபாவை தியானித்தால் பிடிக்கும் என்கிறார்கள் சிலர். சாய்பாபாவுக்கு வியாழக் கிழமை விரதம் இருந்தால் பிடிக்கும் என்கிறார்கள் சிலர். பாபாவுக்கு நன்றாக அலங்காரம் செய்து
பார்க்க வேண்டும், அதுவே பாபாவுக்கு இஷ்டம் என்கிறார்கள் சிலர்.
சரி, இந்த கேள்விக்கு சாய்பாபா என்ன பதில் சொல்கிறார்?
ஸ்ரீ சாய் சத் சரிதத்தில் சாய்பாபா சொல்வதைக் கேளுங்கள்.
“உன் பூஜை அறையில் எனது சித்திரத்தையும், சிலை ரூபத்தையும் வைத்து வழிபடுகிறாய். நான் முன்பே கூறியிருக்கிறேன் ஒவ்வொரு சித்திரத்திலும் சிலையிலும் நான் உயிரோடு தான் இருக்கிறேன் அதனால் தினமும் வழிபடு அதிலும் நறுமணம் கமழ செய், தவறாமல் விளக்கேற்று.
ஆம் விளக்கெரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். என் கதைகளில் கேட்டிருப்பாய் நான் தினமும் எண்ணெய் கடைக்காரர்களிடம் எண்ணெய் பிச்சை எடுத்து துவாரகமாயில் விளக்கெரித்தேன் ஒரு நாள் கடைக்காரர்கள் என்னை ஏமாற்ற நினைத்து எண்ணெய் இல்லையென்றார்கள் ஆனால் நான் அப்போது தண்ணீரில் விளக்கெரித்தேன் அந்த அளவுக்கு விளக்கெரித்தல் முக்கியமாகும் அந்த எண்ணெய் தன்னையே எரித்துக்கொண்டு ஒளி தருவது போல் உனக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்னும் ஒளி தரவே விளக்கேற்றக் கேட்கிறேன்” என்கிறார் பாபா.
ஆம்... சாய்பாபாவுக்கு பிடித்தது தீபம் ஏற்றுதல்தான். ஒரு தீபம்,ஏற்றப்பட்டால் அங்கே பாபா பிரசன்னமாகியிருக்கிறார் என்று பொருள். இருளை அகற்றும் தீபம் போல சாய்பாபா கவலைகளை அகற்றுகிறார். மனதின் இருளுக்கு ஞான தீபம் ஆகிறார் சாய்பாபா.
தீபம் ஏற்றுவதற்கு என்னென்ன தேவை?
எண்ணெய் + திரி + தீ, இதனைச் சேர்த்து படியுங்கள். எண்ணெய்திரிதீ.... இதை ஒழுங்குபடுத்தினால் ’என்னைத் திருத்தி’ என்று ஆகும். இதற்கு பாபா சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?
“நீ தீபம் ஏற்றி என்னை வழிபட்டால் உன் கர்மா வை எரித்து ஆன்மாவை தூய்மையாக்கி வாழ்வில் சந்தோஷம் என்னும் ஒளி கொடுப்பேன்” என்கிறார் சாய்பாபா.
சாய்பாபாவுக்கும் தீபத்துக்குமான பந்தம் மிகவும் ஆழமானது.
சீரடியில் உள்ள துவாரகா மயியில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதி இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.
துவாரகா மயி மசூதியில் சாய்பாபா சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வந்தார். இதன் அருகில் உள்ள இடம் சாவடி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் இரவும் தனது பக்தர்களை இங்குதான் வந்து சந்திப்பார் சாய்பாபா.
துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார். அந்த துனி தீபம் எங்கெங்கும் ஏற்றப்பட வேண்டும். அக்கரைப்பட்டியிலும் ஏற்றப்படுகிறது . சாய்பாபாவின் அன்பு போற்றப்படுகிறது.
ஸ்ரீசாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் ஏற்றி வைக்கும் சாய் தீபம் என்றும் மக்களைக் காக்கிறது அக்கரைப்பட்டியிலே.
பாபா பரவசம் தொடரும்
SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
akkaraipattishirdibaba@gmail.com
http://akkaraipattisaibaba.com

Powered by Blogger.