ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: வைகோ

எழுவர் விடுதலைத் தொடர்பாக, ஆளுநரைக் கண்டித்து  (நவம்பர் 24) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.

ஆளுநருக்குப் பரிந்துரைத்து பல தினங்கள் ஆன நிலையில் எழுவரை விடுவிப்பது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவினர் மூவரை விடுவித்த அரசு ஏன் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க மறுக்கிறது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, வலியுறுத்தி, இன்று காலை 10.30 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அப்போது பேசிய வைகோ, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில் அலட்சியம் காட்டிவரும் ஆளுநரை எதிர்த்து, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவினர் மூவரை விடுவிப்பதற்காகத்தான், முதலில் எழுவரை விடுவிக்கத் தமிழக அரசு 2014ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியதாகக் குற்றம்சாட்டினார் வைகோ.

பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரை விடுதலை செய்ய நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்று கூறும் தமிழக ஆளுநர், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஏழுபேரை ஏன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.