முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாபர் ஷெரிப் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
காங்கிரஸ் மூத்தத் தலைவரான ஜாபர் ஷெரிப் கடந்த
வெள்ளிக்கிழமையன்று மசூதியில் தொழுகை செய்துவிட்டு காரில் ஏறுவதற்காக வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து கன்னிக்குளத்திலுள்ள ஃபோர்டீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு பிரிவில் சிகிச்சைபெற்று வந்த ஜாபர் ஷெரிப், மாரடைப்பால் இன்று (நவம்பர் 25) காலமானார். அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, மருத்துவமனையில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
85 வயதான ஷெரிப், 1933ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்திலுள்ள செல்லாகரே என்னும் ஊரில் பிறந்தார். 1991-1995 ஆம் ஆண்டுகாலத்தில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றினார். ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஷெரிப், கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மவுலானா அபுல் கலாம் ஆஸாத்தின் ‘இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்’ என்ற நூலின் உருது மொழிபெயர்ப்பை வெளியிட ஆவலுடன் இருந்தார் ஜாபர் ஷெரிப்., இப்புத்தகத்தை பெங்களூருவில் வரும் 28ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் ஷெரிப் காலமாகிவிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் நேற்று உயிரிழந்த நிலையில், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் காலமானது கர்நாடக காங்கிரஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சோகமான நாள். மிகமூத்த, அன்புமிகுந்த, மரியாதைக்குரிய எங்கள் குடும்பத்தின் கர்நாடக உறுப்பினர் ஜாபர் ஷெரிப் காலமானார். அவருடைய குடும்பத்தார், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த பாராளுமன்றவாதியான ஜாபர் ஷெரிப் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை வளப்படுத்தினார். கர்நாடகத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தலைவர்களும் ஜாபர் ஷெரிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.