பாகிஸ்தான் அழைப்பு : இந்தியா மறுப்பு

கர்தார்பூர் சிறப்பு பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார்.


சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான, குருத்துவரா தர்பார் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டிய கர்தார்பூர் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கு செல்வதை, சீக்கியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில் கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் எளிதில் சென்று வரும் வகையில் இந்திய எல்லையான, பஞ்சாப் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லையான கர்தார்பூர் வரை தனிவழி அமைக்க திட்டமிட்டு, சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய வசதிகளுடன் தனிவழியை ஏற்படுத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.

இதை ஏற்ற பாகிஸ்தான் சாலை அமைப்பதற்கான பணிகளை விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், கர்தார்பூர் சிறப்பு பாதை, இந்தியா–பாகிஸ்தான் மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும் என பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அதன்படி சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரோஷி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்க மறுத்த சுஷ்மா சுவராஜ், அந்த தேதியில் திட்டமிட்ட வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாக நிராகரித்துள்ளார். எனினும் இந்தியா சார்பில், மத்திய அமைச்சர்கள் ஹர்ஸ்மித் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரிவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் தனக்கு வந்த அழைப்பை நிராகரித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவிற்கு, சித்து சென்றிருந்த போது, அந்நாட்டு ராணுவத் தளபதி குமர் ஜாவத் பாஜ்வாவை கட்டிப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.