தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடக்கம்-விமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் இன்றைய தினம் கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை பற்றிய விபரங்கள் புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது அம்பலமாகியுள்ள காரணத்தினால் நான் அதனை இங்கு குறிப்பிடுகின்றேன். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளைக் கொண்டு எமது இராணுவத்தினர் போலி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமொன்றை (Fake LTTE) உருவாக்கினர்.

இந்த போலியான புலிகள் இயக்கத்தின் மூலம் உண்மையிலேயே எல்.ரீ.ரீ.ஈ காய்ச்சல் உள்ள மனிதர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது நாட்டம் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவ்வாறானவர்கள் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஓர் கட்டத்திற்கு அப்பால் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது, ஏனெனில் கைது செய்யும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.

இதனால், இந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தனர். பாதுகாப்புச் சபை இந்த விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக யார் செயற்பட்டது? அவர்தான் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா.

நரியிடம் சேவல்களை ஒப்படைத்தது போன்று இந்த விடயம் நடந்துவிட்டது.

இந்த விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள், இந்த போலி விடுதலைப் புலிகளை உருவாக்கிய இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பெயர் விபரங்கள் ஊடகமொன்றில் பிரசூரமாகின்றது.

நாமல் குமார என்பவர் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளில் சமூகமளிக்கவில்லை, அவர் ஏன் செல்லவில்லை என தெரியவில்லை, இல்லை அவர் ஏன் செல்லவில்லை என்பதனை எனக்கு சொல்லப் புரியவில்லை.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று சமஸ்டி ஆட்சி குறித்த அரசியல் அமைப்பு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியை சுமந்திரனே கட்படுத்துகின்றார், இது ஓர் துர்ப்பாக்கிய நிலைமையாகும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.