யாழில் வாள்களால் துரத்தி வெட்டிய ஈ.பி.டி.பி காவாலிகள்!

வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், முன்னணியின் உறுப்பினருடன் சென்ற இளைஞன் ஒருவரையும் ஈபிடிபி உறுப்பினரின் புதல்வர்கள் மற்றும் அவர் சார்ந்த கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கியுள்ள அழுத்தத்தால், பொலிஸார் மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை சமூகப் பிரச்சினையாக பூதாகாரமாகும் பதற்ற நிலை வட்டுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கார்த்திகை விளக்கீடு நாளான நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் துணவிச் சந்தியில் இடம்பெற்றது.
வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் மற்றும் அவரது நண்பரான வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்துள்ள தேவகுமார் கபிலன் என்பவருடைய சங்கரத்தைக் குளத்துக்கு அண்மையாக உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அதன்போது சங்கரத்தைக் குளத்துக்கு அண்மையாக சுமார் 40 பேர் கொண்ட கும்பல் வாளுகள் கத்திகள் மற்றும் பொல்லுகளுடன் நின்றுள்ளது. அந்தக் கும்பலுக்கு வலி.மேற்கு பிரதேச சபையின் ஈபிடிபியின் உறுப்பினர் நடேசன் என்பவர் தலைமை தாங்கி நின்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை வழிமறித்த அந்தக் கும்பல், கடுமையாகத் தாக்கியுள்ளது. அத்துடன், அவரது நண்பரை வாளால் வெட்டியதுடன் கடுமையாகத் தாக்கியுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞன், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு தினங்கள் சிகிச்சைக்குப் பின்னர் இன்று சனிக்கிழமையே வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வட்டுக்கோட்டைப் பொலிஸார், சம்பவத்தை சமூக மட்ட மோதலாக மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.
“சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா ஐயா அறிவுறுத்தியுள்ளார். அவர் நேற்றும் இன்றும் பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்துவிட்டார். சமூகப் பிரச்சினைக்கு காரணமானவர்களைத் தான் கைது செய்யவேண்டும்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்தத் தகவல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தைப் பெற முடியவில்லை.
இந்தச் சம்பவத்தை பத்திரிகைகளும் மூடி மறைத்துள்ளன குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இவ்வாறு செயற்படுவதால், தாக்குதல் நடத்தியவர்கள் தமது அடாவடிகளைத் தொடர்வர் என்றும் வட்டுக்கோட்டையில் சமூக மட்ட மோதல் ஒன்றுக்கு அது வழிவகுக்கும் என்றும் மக்கள் அச்சம் வெளியிட்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.