மதுபாலாவின் மிரட்டலில் ‘அக்னி தேவ்’!

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள அக்னி தேவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. இந்தப் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இதன் தொடர்ச்சியாக மசாலா படம், உறுமீன் ,திருட்டுப் பயலே 2, சாமி ஸ்கொயர் உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக ஏதும் பேசும்படியாக அமையவில்லை.
இந்நிலையில் தற்போது, அக்னி தேவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், சதீஷ் முக்கிய பாத்திரம் ஒன்றிலும், மதுபாலா வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர்.
சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஜான்பால் ராஜன், சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோ தயாரித்துள்ளது. அக்னி தேவ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டு இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெலர் இன்று (நவம்பர் 25) வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பார்க்கும் போது த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில், தமிழகத்தின் முக்கிய பெண் அரசியல்வாதியைப் போல் மதுபாலா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. “சகுந்தலா தேவியாகிய நான், என் வீல் சேர் டயர நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க, அரசியலில் கனவுல வர எதிரியைக் கூட நிஜத்தில் இல்லாமல் பண்ணிருவேன்” என மதுபாலா பேசும் வசனங்களும், வீல் சேரும், வயதான தோற்றத்தில் வரும் மதுபாலாவுக்கு பின்னால் இளவயது ஜெயலலிதாவின் படம் மாட்டப்பட்டிருப்பதும், கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் புரொமோஷனுக்கு தயாராகி விட்டது அக்னி தேவ்.
Powered by Blogger.