பூகோள நெருக்கடியில் சிங்கள தேசம் பிளவுண்டு கிடைக்கையில் தமிழர் தேசம் எழுச்சி கொண்டுள்ளது

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை முற்றாக மழுங்கடித்து விடுதலைப்புலிகளின் தியாகத்தை மக்களின் மனங்களில் இருந்து அகற்றிவிடலாம் என்பது எதிரிகளின் கணிப்பீடாக இருந்தது, சில வருடங்களில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தையும், விடுதலை வீரர்களையும் மறந்துவிடுவார்கள் என்பது சிங்கள இந்திய கூட்டுச் சதியின் கணிப்பு.


ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல எழுச்சி பெற்ற எமது மாவீரர்களின் நினைவு நாளும், எமது மக்களின் சுதந்திர தாகமும் தற்போது எல்லா அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து உச்சம் பெற்றுள்ளது.


அதாவது எமது அடுத்த தலைமுறை தமிழினத்தின் விடுதலைப்போரை பொறுப்பேற்றுள்ளதற்கான அடையாளமே இந்த மக்கள் எழுச்சி. தமிழகத்திலும் சரி தமிழீழத்திலும் சரி இளைஞர்களும், இளம் பெண்களுமே அதிகளவு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர், யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளனர்.


பல ஆயிரம் மாவீரர்களை தந்த வடக்கும் கிழக்கும் தற்போது தமது புதல்வர்களை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து நிற்கின்றது. கருணாவின் துரோகத்தையும், சிங்களப் படையினரின் அடக்கு முறைகளையும் மீறி கிழக்கின் மிகப்பெரும் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது புத்துணர்வு பெற்றுள்ளது, அது மட்டுமல்லாது, கஞ்சிகுடிச்சாறு, வாகரை, மாவடிமுன்மாரி, உட்பட பல இடங்களில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.


அதேபோல வடக்கிலும், கோப்பாய், சாட்டி, உடுத்துறை, கனகபுரம், இரணைப்பாலை, முள்ளியவளை, ஆலங்குளம், தேராவில், விஸ்வமடு, கிளிநொச்சி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அதாவது தமிழீழத்தில் உள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.


அது மட்டுமல்லாது, யாழ் பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்களிலும், மக்கள் தமது வீடுகளிலும் தீமமேற்றி தமது விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர். கிளிநொச்சியில் மாவீரர் வளைவுகளும், யாழ் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரும் நினைவு எழுச்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வழமைபோல சிங்களப் படையினர் வடக்கில் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், மக்கள் அதனையும் மீறி அங்காங்கே தம்மால் தயாரிக்கப்பட்ட புலிக்கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர்.

 
அதாவது ஆயிரம் வருடங்கள் சென்றாலும் விடுதலைப்புலிகளின் நாமத்தையும், தலைவர் பிரபாகரனின் வாரலற்றையும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பது இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகளுக்கு தற்போது நன்கு புரிந்திருக்கும்.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் தமிழீழத்தைப் போலவே இந்த தடவை மிகப்பெரும் எழுச்சியை சந்தித்துள்ளது, தஞ்சை, புலியூர், புதுச்சேரி மில்லர் அரங்கு உட்பட பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், பெருமளவான மக்கள் தமது இல்லங்களிலும், நிறுவனங்களிலும் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.


புலம்பெயர் தேசங்களும் இந்த முறை மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வை நடத்தியுள்ளதுடன் பெருமளவான மக்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.


பூகோள அரசியலில் சிங்கள தேசம் பிளவுண்டு கிடைக்கையில், இந்திய தேசமும் அந்தரத்தில் தொங்கும் போது தமிழ் மக்களின் இந்த ஒற்றுமையான எழுச்சியானது, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் தீர்த்ததரிசனமானது நிதர்சனமாகும் காலம் அதிக தொiவில் இல்லை என்பதை எடுத்தியம்புகின்றது.


தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளின் நினைவுகளை நெஞ்சிலே சுமந்து நாம் மேலும் உத்வேகத்துடன் அவர்களின் இலட்சியத்தை நோக்கி நகரவேண்டும். தமிழ் மக்களின் விடுதலையும், தமிழ் இனத்திற்கு என ஒரு சொந்தமான நாடுமே அவர்களின் கனவு. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்பதன் மூலம் அதனை நாம் நிறைவேற்றுவோம்.


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.