கஜா பாதிப்பு: தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளது

புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் முழுமையாகக்
கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 65 மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 29) நடைபெற்றது. இதை, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “புயலால் பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம், புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே 100 மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, 65 மருத்துவக் குழுக்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் முழுமையாகக் கட்டுக்குள் இருக்கிறது. மக்களுக்குத் தேவைப்படுகிறவரை இந்தச் சுகாதாரப் பணிகள் தொடரும்” என்று தெரிவித்தார்.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
புயலுக்குப் பிறகு, திருவாரூர் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக 180 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சேவையாற்றி வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களை அமைச்சர் காமராஜ் நேற்று வழங்கினார். அப்போது, பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
6.21 லட்சம் பேருக்கு சிகிச்சை
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 9,703 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதுவரை 29 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், யாருக்கும் காய்ச்சலோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.