2.O: தொழில்நுட்பம் மட்டும் போதுமா

அன்றாடம் பிரச்சினைகளிலும் துன்பங்களிலும் உழலும் மனித மனம்
அதிலிருந்து மீள அற்புதங்களுக்கு ஏங்கும். அந்தத் துயரங்களிலிருந்து விடுபட அந்த ஏக்கங்கள்தான் பகல் கனவுகளாக (day dreaming) மாறும். அந்தக் கனவுகள் சில சமயம் கற்பனைகளாக (fantasy) மாறுகின்றன. இதனால் அற்புதங்கள், அதிசய சக்திகள், மனித சக்தியை மீறிய சக்திகள் ஆகியவற்றைக் கலை இலக்கியங்களில் சினிமாக்களில் ரசிக்கிறோம். ரஜினி என்ற பிம்பம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் எப்போதும் ஓர் அதிசயத்தை நிகழ்த்தும் கதாநாயகனாகவே பதியப்பட்டுள்ளதால் இத்தகைய கதைகளில் அவர் நடிக்கும்போது அதற்கான வரவேற்பு அதிகம் இருக்கும். எந்திரன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு அதை உறுதிப்படுத்தியது. இரண்டாம் பாகமான 2.O திரைப்படத்துக்கு அதனாலேயே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா என்பதை அலச வேண்டியது அவசியமாகிறது.
மாயமாய் மறைந்துபோகும் லட்சக்கணக்கான மொபைல்போன்கள் ஒன்றிணைந்து பறவை மனிதனாக உருபெறுகிறது. நகரை அழிக்க வரும் அந்தப் பறவை மனிதனைச் சமாளிக்க முடியாமல் ஒட்டிமொத்த அரசாங்கமே தவிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த மக்களைக் காப்பாற்ற வசீகரன் சிட்டி ரோபோட்டை மீண்டும் களமிறக்க வேண்டும் என்கிறார். அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்தால்தான் அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பறவை மனிதனை சிட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததா, பறவை மனிதன் உருவான காரணம் என்ன என்ற கேள்விகளோடு திரைக்கதை பயணிக்கிறது.
படத்தின் டீசரிலேயே படக்குழுவினர் வெளிப்படுத்திவிட்ட கதை முதல் பாதி முழுக்க வெவ்வேறு காட்சிகளின் மூலம் கூறப்பட்டுக்கொண்டே உள்ளது. கண்கவரும் விதத்தில் அனிமேஷன் காட்சிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர திரைக்கதையில் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் தேங்கிவிடுகிறது. இதனால் பார்த்த காட்சிகளைத் திரும்ப பார்க்கிறோமோ என்ற உணர்வு ஏற்படுகிறது.
அக்‌ஷய் குமார் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ரெட் சிப் மாட்டப்பட்ட சிட்டியும், குட்டி சிட்டியும் உடல்மொழியால் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள். முதல் பாகத்தில் வசீகரனுக்கும் சிட்டிக்குமான மோதல் மிகுந்த வரவேற்பு பெற்றது. வில்லன் தன்மையுடன் சிட்டி செய்த அட்டகாசங்கள் ரசிக்க வைத்தன. இந்தப் பாகத்தில் வசீகரன் வில்லன் கதாபாத்திரமாக மாறி, சிட்டியுடன் மோதும் இடம் வருகிறது. சுவாரஸ்யமாகச் சென்ற அந்த ஒரு காட்சியுடன் அது முடிவடைந்துவிடுகிறது.
கதாநாயகி வேண்டும் என்பதற்காக ஏமி ஜாக்சனை ரோபோவாக மாற்றி உலவ விட்டுள்ளனரோ என்ற சந்தேகம் வந்தாலும் முக்கியமான கட்டத்தில் அவரது பங்களிப்பு அவரது இருப்பை உறுதி செய்கிறது.
மனித ஆவி, பறவைகளின் ஆவி இரண்டும் இணைந்து மொபைல்களுடன் சேர்ந்து மனிதர்களை அழிப்பதாக இயக்குநர் ஷங்கர் கதை சொல்கிறார். ஆனால், நவீன தொழில்நுட்பம் என்று கூறிவிட்டு ஆவி, அனுமானுஷ்ய சக்தி என்றால் சிரித்து விடுவார்கள் என்பதால் அதை நுட்பமாக மறைத்து விடுகிறார். இது செல்போன் ஆவி கதைதான். அதற்குப் பறவைகள் காப்பாற்றப்பட்டால்தான் மனித குலம் காப்பாற்றப்படும் என்று நீதி போதனை சொல்கிறார். இதற்கு இவ்வளவு பிரமாண்டமாக அம்மி கொத்துதல் தேவையில்லை. ஆனால், பொதுவாக அனுமாஷ்ய சக்தி ஆவி கதைகள் என்றால் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அதுவும் இந்தப் படத்தில் கைகூடவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிராபிக்ஸ் உருவாக்கத்தில் பணியாற்றியிருந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாததால், க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் உட்பட பல காட்சிகளில் உணர்வுபூர்வமாக ஒன்றமுடியாமல் வெறுமனே இரு பொம்மைகள் மோதிக்கொள்வதைப் பார்க்கும் உணர்வே மேலிடுகிறது. ரஜினி என்ற மாபெரும் கதாநாயக பிம்பத்துக்கான மாஸ் படத்தில் எந்தக் காட்சியிலும் இல்லை.
ரஹ்மான் இசையில் புல்லினங்காள் பாடல் கவனம் ஈர்க்கிறது. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, முத்துராஜின் கலை இயக்கம், அந்தோணியின் படத்தொகுப்பு மற்றும் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் கிராபிக்ஸ் பணிகள் என தொழில்நுட்ப ரீதியாகப் படம் தரமாக உருவாகியிருந்தாலும் இவை அத்தனையையும் இணைக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் முழுமையான திரைப்பட அனுபவத்தைப் பெற முடியவில்லை.
இதெல்லாம் ஒரு தப்பா என்று சாதாரணமாக கடந்து போகும் விஷயங்களின் பின்னால் உள்ள மிகப் பெரும் தவறு சமூகத்தில் பெரிய அழிவை ஏற்படுத்தும். அதைக் கண்டு வருந்தும் பாமரனான படத்தின் நாயகன் அதைத் தடுக்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து சமூகத்தை திருத்தப் போராடுவான். அதனால் பொது சமூகத்தால் இளக்காரமாகப் பார்க்கப்படும் அவன் தன் முயற்சியில் தோற்றுப்போவான். ஒரு கட்டத்தில் அடக்கிவைக்கப்பட்ட அவனது கோபங்கள் அவனை அசாதாரண உருவெடுக்க வைக்கும். வெகுண்டெழுந்து கற்பனைக்கெட்டாத குரூரத்துடன் குற்றமிழைப்பவர்களை பழிதீர்ப்பான். இந்தியன், அந்நியன் என ஷங்கரின் படங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.
நடைமுறை சாத்தியமற்ற, கொடூரக் கொலை ஒன்றே தீர்வு என்ற பொய்யான முடிவை முன்வைப்பதுகூட இதற்கெல்லாம் தீர்வே இல்லை என்று சொல்லாமல் சொல்வதாகும். திரைக்கு வெளியே இந்தப் பிரச்சினைகளை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை என்று சாதாரண பார்வையாளன் உணர்ந்துகொண்டு பொய்யாக அதை நிகழ்த்திக்காட்டுகிற கதாநாயகனின் செய்கைக்குக் கைதட்டி மகிழ்வான். ஷங்கரின் டிரேட் மார்க்கான இந்த ‘நாயக’ அம்சம் தான் 2.O படத்தின் வில்லனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது வெற்றிக்கு வழிவகுத்த இந்தப் பாணி எவ்வளவு மோசமான தன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஷங்கர் உணர்ந்துகொண்டாரோ என்னவோ, தனது நாயகனை ரஜினிக்கு வில்லனாக நிறுத்தி தண்டனை பெற்றுத்தருகிறார். 2.O படத்தை முன்னிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்ட ஷங்கரை இதற்காகக் கட்டாயம் பாராட்டலாம்.
Powered by Blogger.