எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கலைஞர்

வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெற இருக்கும்
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி கலந்துகொள்ள இருக்கிறார். இதுகுறித்து அவர் திமுகவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மறைந்த திமுக தலைவரின் சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த பெருமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றபோதும் சோனியவை பிரதமர் ஆக்க கூடாது என்றும் அவர் வெளிநாட்டவர் என்றும் காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் குரல்கள் எழுந்த நிலையில், சோனியா காந்திக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் திமுக தலைவர் கலைஞர். ஆனபோதும் மன்மோகன் சிங்கையே பிரதமராக தேர்ந்தெடுத்தார் சோனியா. அதன் பிறகான பத்து வருட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கலைஞரிடம் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக சோனியாவே சொல்லியிருக்கிறார்.
இப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிற சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி போன்ற இப்போதைய தலைவர்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லுகிற ஒரு விஷயம், ‘தென்னிந்தியாவில் கருணாநிதிபோல ஒரு தலைவர் இப்போது இல்லையே. அவர் இருந்திருந்தால் இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவு என்பது இன்னும் விரைவாகவும் எளிதாகவும் இருக்கும்’ என்பதுதான்.
வரும் டிசம்பர் 10 ஆம் தேதி டெல்லியில் கூட இருக்கும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடுத்து கூட இருக்கும் இடம் சென்னை. டிசம்பர் 16 ஆம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியும் மற்றும் பல முக்கிய தேசியத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கலைஞர் இல்லையென்றால் என்ன, எதிர்க்கட்சிகளை கலைஞர் சிலை ஒருங்கிணைக்கிறது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.