சர்கார்: தமிழகத்தையே விஞ்சிய கேரளா!

சர்கார் பட வெளியீட்டையொட்டி இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகருக்கும் வைக்கப்படாத அளவிற்கான மிகப்பெரிய பேனரை வைத்து பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்துள்ளனர் கேரளாவின் கொல்லம் பகுதி விஜய் ரசிகர் மன்றத்தினர்.

நடிகர் விஜய்க்கு தமிழகத்தைப்போலவே பக்கத்து மாநிலங்களிலும் பெருவாரியான ரசிகர் படை உண்டு. குறிப்பாக கேரளாவில் இவரது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டினர் மலையாளப் படங்களை அதிகம் பார்க்கும் கலாசாரம் தொடர்ந்து பெருகிவருவதைப்போல மலையாளிகளும் தங்களது மலையாளப் படத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பார்க்கும் படமாக பெரும்பாலும் தமிழ்ப் படங்களையே தேர்வு செய்வதைக் காண முடிகிறது.
அப்படியான தமிழ் நோக்கிப் படையெடுக்கும் மலையாள இளைஞர்களின் முதன்மைத் தேர்வாக அறியப்படுபவர் விஜய். இதனாலேயே கேரளாவில் நாளுக்குநாள் அவருக்கான ரசிகர்களும் மன்றங்களும் பெருகிவருகின்றன. இப்படியாக தமிழகத்தில் விஜய் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதைப்போல கேரளாவிலும் அம்மாநில விஜய் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சர்கார் வெளியாவதால் அதைச் சிறப்பிக்கிற வகையில் சுமார் 175 அடி உயரத்திற்கு பிரமாண்ட பேனர் வைத்து பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது அங்கேயுள்ள கொல்லம் நண்பன்ஸ் ஃபேன்ஸ் கிளப். இதை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்துவைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சமூக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
175 அடியில் இது அமைக்கப்பட்டுள்ளதால் இதுவே இந்தியாவில் நடிகர் ஒருவருக்கு வைக்கப்பட்ட மிக உயரமான பேனர் எனும் சிறப்பைப் பெறுகிறது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அந்த பேனரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
24 மணி நேரமும் ஓடக்கூடிய சினிமா மாரத்தான் எனும் ட்ரெண்ட் நிவின் பாலியின் காயம்குளம் கொச்சுண்ணி படத்திற்கு பிறகு விஜய்யின் சர்கார் படத்திற்குத்தான் கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.