சிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 மனித உடல்கள் கண்டுபிடிப்பு!


இஸ்லாமிய அரசை வலியுறுத்தும் ISIS தீவிரவாதிகளின் முன்னாள் தலைநகரான சிரியாவின் ரக்கா மாகாணத்தில், மொத்தம் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்களை கொண்ட புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ ஆதாரங்களின் படி, அமெரிக்கா தலைமையிலான படையினர் ரக்கா மீது மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களையே இங்கு புதைத்திருக்கலாம் என்று புதன்கிழமை வௌியான அல் வட்டன் என்ற செய்தித்தாள் தகவல் வௌியிட்டிருந்தது.

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அவர்களின் கட்டுப்பாட்டில் ரக்கா நகரம் இருந்தது.

அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தப் போரில் அதிபருக்கு ஆதரவான படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தியிருந்தன.

அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டமை, சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் ரக்கா நகரத்தில் பாரிய புதை குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதில் 1,500 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், வான்தாக்குதல்கள் காரணமாக ரக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.