வாள்வெட்டில் காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..!


யாழ்.குடத்தனை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அதிகாலை வேளை வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29ஆம் திகதி அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்திருந்தனர்,

அதில் படுகாயமடைந்திருந்த ஜெயஸ்ரீ நிர்மலாதேவி (வயது 53) என்பவரே சிகிச்சை பயனின்றி வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று உயிரிழந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த எம். சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி. ஜெயந்தி (வயது 40) ஆகிய இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை குறித்த தாக்குதலை அப்பகுதியை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் முடித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் , குறித்த தாக்குதலாளி போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் ஏற்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த சந்தேக நபரான தர்சன் சம்பவம் நடைபெற்றதற்கு மறுநாள் 30ஆம் திகதி பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

அதனை அடுத்து பொலிசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் சம்பவ தினத்தன்று கசிப்பு அருந்தி போதையில் இருந்ததாகவும் , போதையிலையே தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்..

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை போலீசார் மறுநாள் 31ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்தினார்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. 

No comments

Powered by Blogger.