தோனியைப் பின்பற்றத் துடிக்கும் இளம் வீரர்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள க்ருனால் பாண்டியா, மகேந்திர சிங் தோனியைப் பின்பற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இன்றைய இளம் வீரர்களுக்குச் சிறந்த முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் நீண்ட காலமாக சிறந்த விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் அதிரடி ஃபினிஷராகவும் வலம் வந்த இவர் சமீபகாலமாக ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். இதனையடுத்து இவரை இந்திய டி20 அணியில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கிவிட்டு, ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், க்ருனால் பாண்டியா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.

இந்திய அணியில் தற்போது புதிதாக இணைந்துள்ள க்ருனால் பாண்டியா, தோனியின் எளிமையும் அவரது பொறுமையும் தன்னை ஈர்த்ததாகவும், இவரது இந்த குணத்தை தானும் பின்பற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இணைந்து பயிற்சி பெற்று வரும் க்ருனால் பாண்டியா டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியபோது, "தோனி அவரது வாழ்நாளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவிட்டார். இருந்தாலும் இன்னுமும் எளியமையாகவே இருக்கிறார். புகழை அவர் கையாளும் விதம் ஆச்சரியமளிக்கிறது. கடந்த ஆறு நாட்களாக தோனியை அருகில் இருந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். நானும் அவரைப்போல் ஆக வேண்டும் என்று எனக்குள் கூறிக் கொள்வேன். எளிமையான பண்பையும், நெருக்கடி சமயத்தில் துணிச்சலாக முடிவெடுக்கக்கூடிய திறனையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (நவம்பர் 4) நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.