ஆண்டிப்பட்டியில் தினகரன் உண்ணாவிரதம்!

ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அமமுக சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.


தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 18பேருடனும் சென்னையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் வஞ்சிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை. எங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் புறக்கணிக்கப்படுகிறது. இதை கண்டித்து 22 தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். மேலும் தொகுதி வாரியாக உண்ணாவிரதம் நடைபெறும் தேதிகளையும் அவர் வெளியிட்டார்.

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பில், 18பேரும் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிடப்பட்ட நிலையிலும், திட்டமிட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துவிட்டார். அதன்படி, தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆண்டிப்பட்டி தொகுதியில் நவம்பர் 10ஆம் தேதியும், நிலக்கோட்டையில் 11ஆம் தேதியிலும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் துறையிடம் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கக் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, அமமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நேற்று (நவம்பர் 2) விசாரித்த நீதிமன்றம், உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து உரையாற்றவுள்ளார்.

 

No comments

Powered by Blogger.