டிஎன்பிஎஸ்சி: தமிழில் வினாத்தாள்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் தொகுதித் தேர்வுக்கான வினாத்தாளைத் தமிழில் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் ஆய்வாளர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் காலியாக உள்ள 1199 இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதித் தேர்வுகள் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்வுகள் உட்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து நிலை போட்டித் தேர்வுகளுக்குமான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப் பட வேண்டும். ஆனால், இப்போது அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல தாள்களுக்குத் தமிழில் வினா தயாரிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும், அதனால் பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் நேற்று (நவம்பர் 3) அறிவித்தனர்.

இந்நிலையில், ”இரண்டாம் தொகுதி தேர்வு எழுதும் 6.26 லட்சம் பேரில் 4.80 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 லட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதற்கான முதனிலைத் தேர்விலோ அல்லது முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதும் போட்டித் தேர்வர்களுக்கு மிகக்கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்குத் தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப் போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதைத் தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

”பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போரில் பெரும்பான்மையினர் தமிழில் தேர்வெழுதவே விரும்புவர். ஆனால், அந்த வாய்ப்பைப் பறித்து ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. தமிழில் வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ் தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படாவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.