மட்டக்களப்பில் நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


“ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று“ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மக்களின் ஜனநாயக கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இங்கு கோசங்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி தற்போது செயற்படுவதாகவும் இதன்போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றினைக் கூட்டி ஜனநாயக குரலுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், முகாமையாளர்கள், மாநகர, பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.