பாகுபலி நடிகருடன் சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இவருக்கு ஜோடியாக பாகுபலி நடிகர் இணைந்துள்ளார்.

சாய் பல்லவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகித் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார்.
தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவந்த இவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார். படம் ரசிகர்களைக் கவராததால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் வேணு உடுகுலா இயக்கும் அடுத்த படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். வேணு உடுகுலா இதற்குமுன் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். இவர் கூறிய திரைக்கதை சாய் பல்லவிக்குப் பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்திருந்தார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன், உணர்வுபூர்வமான காதல் கதையில் தயாராகும் இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக பாகுபலி புகழ் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு ‘விரத பருவரம் 1992’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீரியட் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.