எம்பிபிஎஸ் பாடத்திட்டம் மாற்றம்!

21 ஆண்டுகளுக்குப் பின்னர், எம்பிபிஎஸ் பாடத்திட்டமானது மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டம் வரும் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


நேற்று முன்தினம் இறுதிசெய்யப்பட்ட புதிய எம்பிபிஎஸ் பாடத்திட்டம் நேற்று (நவ-3) மருத்துவக் கவுன்சிலின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவ பாடங்கள் தவிர, மருத்துவத்தொழிலின் அறநெறிகள், நோயாளிகள் மற்றும் அவரது குடும்பங்களின் தேவைகளை எதிர்கொள்வதற்கான திறன்கள், மருத்துவர்களின் தொடர்பு கொள்ளும் முறைகளை மேம்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அத்துடன் மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலினால் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்டமானது 21 ஆண்டுகள் கழித்து மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் புதிய வகை நோய்கள் அவற்றை எதிர்கொள்ள அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றிருக்கும். மூன்று தொகுப்புகளாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய பாடத்திட்டத்தில் கற்றுகொள்வதையும் நோயாளிகளையும் மையமாகக்கொண்ட மருத்துவ சிகிச்சை முறையும் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலினக் கண்ணோட்டத்துடனும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடனும். சிகிச்சையின் விளைவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், ஒரு மருத்துவர் வெறும் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, நோயாளியை முழுமையாகப் புரிந்து கொள்பவராகவும் இருப்பார். ஒரு நோயாளியின் பாலினம் அவருடைய சமூக அந்தஸ்து ஆகியவற்றை கவனத்தில்கொண்டு மருத்துவர் நோயாளியைப் பரிசோதிப்பார். இத்துடன் புதிய பாடத்திட்டத்தில் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.