பெண்களுக்கு தடை விதிக்கும் காளி பூஜை!

சபரிமலைக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே பாணியில் கொல்கத்தாவில் உள்ள காளி பூஜையிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் பிரபல காளி பூஜை ஒன்றிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவின் பஞ்சமுண்ட காளி பூஜை  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பூஜையில், பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

இதுகுறித்து பேசிய அந்த கோவிலின் நிர்வாகிகளுள் ஒருவரான கங்காராம் ஷா, "34 ஆண்டுகளாக நாங்கள் தாந்த்ரீக முறைப்படி பஞ்சமுண்ட காளி பூஜையை நடத்தி வருகிறோம். தாரபித் பகுதியில் உள்ள தாந்த்ரீகர்கள் தான் இந்த பூஜையை நடத்துவார்கள். எங்கள் முன்னோர்களிடம் கேட்டு பார்த்துவிட்டோம். பெண்கள் இங்கு எதையுமே தொடவே கூடாது என தெரிவித்து விட்டனர்" என்றார்.
தீபாவளி அன்று இந்த பூஜை நடைபெறுகிறது.

முதல் பூஜையில் இருந்தே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என ஷா கூறினார். பெண்களை அழைக்க வேண்டும் என எங்களுக்கும் ஆசை தான். ஆனால், இது எங்கள் பூஜையல்ல, தாந்த்ரீக முறைப்படி செய்ய வேண்டியதாகும், என மற்றொரு நிர்வாகி கூறினார்.

ஆனால், தாரபித் பகுதியில் உள்ள பிரபல துவாரகா கோவிலை சேர்ந்த மூத்த அர்ச்சகர் ஒருவர் இதுகுறித்து பேசியபோது, இங்குள்ள மிகவும் அனுபவமிக்க அர்ச்சகர்களில் நானும் ஒருவன். பெண்களை பூஜைக்குள் வரவிடாமல் தடுக்கும் ஒரு விதி இருப்பதே எனக்கு தெரியாது. எங்கள் கோவிலில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி உண்டு. இதை எதிர்ப்பவர்கள் யார் என எனக்கு தெரியாது" என்று கூறினார். 

No comments

Powered by Blogger.