திருகோணமலை, கேணியடி பகுதியில் பெண்ணொருவர் கொலை !

திருகோணமலை, கேணியடி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது மகள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவத்தில் 68 வயதுடைய யோகராஜா ஜோனாம்பியம் என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது மாற்றுத்திறனாளியான மகளும் அவர்களது வீட்டின் அறையினுள் உறங்கிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அதன் பின்னர் அவரது அருகில் உறங்கிக்கொண்டிருந்த மகளையும் சந்தேக நபர்கள் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகைகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்டவரின் மகன் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதாகவும் அதனைக்கொண்டு உயிரிழந்த பெண் அப்பகுதியில் வட்டி வியாபாரம் செய்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலைத் தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.