நாடெங்கும் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தீபாவளி பண்டிகை இலங்கையிலும் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.


குறிப்பாக தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரம், பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில், கொள்ளுப்பிட்டி முருகன் கோயில், தெஹிவளை விஷ்ணு கோயில், கப்பிகாவத்தை பிள்ளையார் கோயில் போன்ற பல்வேறு ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்தோடு, வடக்கின் குறிப்பாக தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கிளிநாச்சி கிருஷ்ணர் ஆலயம், நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் முதலானவற்றிலும் திருகோணமலையில் திருகோணேஸ்வரம், ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், மன்னார் திருக்கேதீஸ்வரம், வவுனியா நரசிங்கர் ஆலயம் முதலானவற்றில் பல சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அத்தோடு, ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதோடு நாட்டின் அமைதி, சமாதானத்திற்காக பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை மலையகத்தில் பதுளை, நுவரெலியா, ஹட்டன், புஸ்ஸல்லாவை, கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் மிகவும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுதோடு, ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்துக்கள் கடும் மழைக்கு மத்தியிலும் இன்று செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை விஷேட பூஜைகள் நடைபெற்றன. இந்துக்கள் செரிந்துவாழும் சிலாபம், முன்னேஸ்வரம், உடப்பு, முந்தல், புத்தளம், கல்பிட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.