அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிக்க ஜே.வி.பி. ஆதரவளிக்கும்!

கடந்த மாதம் 26ஆம் திகதி நடந்தது அரசியல் சதித்திட்டம் எனவும் இதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளதாகவும் அந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க கொண்டு வரப்படும் எந்த யோசனையாக இருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் 5ஆம் திகதி கூட்டப்படும் என மகிந்த ராஜபக்ச முதலில் கூறினார், மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றம் 7ஆம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

7 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்பதால், அன்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கடந்த 2 ஆம் திகதி சபாநாயகர் கூட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புக்கொண்டு 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட இணங்கியதாக சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்றத்தை 7 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னரே எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கூட்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

மைத்திரிபால சிறிசேனவின் அணியினருக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள கறுப்பு பணம், பதவிகளை வழங்கவே இந்த காலத்தை ஒதுக்கியுள்ளனர்.

5 ஆம் மற்றும் 7 ஆம் திகதிக்குள் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முடியாது போயுள்ளது. இதனால், எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் கறுப்பு பணம், அமைச்சு பதவிகளை கொடுத்து 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தை திரட்ட இந்த அணியினர் முயற்சித்து வருகின்றனர்.

மகிந்த ராஜக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன அணியினர் கறுப்பு பணம் மற்றும் அமைச்சு பதவிகளை கொடுத்து அரசாங்கத்தை அமைக்கலாம் என நினைக்கின்றனர். இதனால் அந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.

எனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அதிகாரத்தை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமான நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள சதித்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.

பணத்தை கொடுத்து அரசாங்கத்தை அமைக்கும் சதித்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி இந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க எந்த நேரத்திலும் தயாராக உள்ளது.

நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது அதற்கு வெளியிலும் இந்த சதித்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க இதன் போது தெரிவித்திருந்தார்.
#Anura Dissanayake #Colombo #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.