மாவீரர் மாதம்..!

உலகெங்கும் வானம்
அழுகின்ற மாதம்
உதிர்ந்திட்ட மலர்கள்கூட
மணம் பரப்பும் மாதம்
மானத்தமிழரெல்லாம்
மனமுருகும் மாதம்
ஈழத்தமிழரெல்லாம் மறவர் ஈகத்தை
எண்ணித் துடிக்கின்ற மாதம்
மழையில் மரம் குளித்து
சாமரமாய் குளிர் காற்றை
வீர மறவர்கள் விதை நிலத்தில்
வீசுகின்ற மாதம்
கல்லாத் தமிழனும்
வேங்கைகளின் வீரமெண்ணி
கவிஞராக புரட்சிப்பா பாட
புறப்படும் மாதம்
சொல்ல முடியாத
உணர்வெழுந்து உள்ளே
சுதந்திரத்தை- எங்கே
அது எங்கேயெனத் தேடும் மாதம்
மண்ணில் விழுகின்ற
மழைத்துளியை வெல்லும் வகையாய்
தமிழர் கண்கள் தம் பிள்ளைகளை
எண்ணி விழி நீரை தூவும் மாதம்
மானமறவர் சேனை பெருந்தலைவன்
பேசானோ!? பேசானோவென
உலகத் தமிழரெல்லாம்
உள்ளத்தால் தேடும் மாதம்
காலப் பெரு நதியில் காணாமல் போன
தமிழன் வீர வரலாற்றை
மீளத் தர எமக்கு வானச் சூரியனே
எம் தலைவனாய் வந்த மாதம்
விளக்கேற்றும் சகல பொழுதிலும்
மாவீரர் முகங்கள் தோன்றி
எமை மறந்தீரா?
எம் கனவையும் மறந்தீரா?
என கேட்கின்ற மாதம்
ஆம்!
இது கார்த்திகை மாதம்
செங்காந்தள் பூப்பூக்கின்ற மாதம்
செந்நிலத்து சூரியரை நினையும் மாதம்
ஆம்!
இது மாவீரர் மாதம்
வாகைக்காட்டான்
பெரியகுளம்

No comments

Powered by Blogger.