காந்தளின் காதலர்..!எம் தமிழுக்காக
நாமெழுந்தால்
தலைக்கனமென்கிறார்
எம் இனத்திற்காக
நாமழுதால்
வீண்வேலை என்கிறார்!

யாருமில்லா எம்மண்ணை
தொட்டணைத்தால்
கெட்டவன் என்கிறார்
நீரில்லா நிலமதில்
நீரிறைத்தால்
நீதிக்கு புறம்பென்கிறார்!
ஊர்போகும் மேகங்கள் எல்லாம்
கார்மேகங்கள் அல்ல
நீர்தாங்கும் நிலமெல்லாம்
உயிர்தாங்கும் குணமல்ல!
மண் தின்று கொழுக்கும் முன்
எம் மனம் நிறைந்து சாகவேண்டும்
கண்கெட்ட உலகத்தின் முன்
எம் மண் பட்ட பாட்டினை
பாடவேண்டும்.
எவன் என்ன சொன்னாலும்
எம் தமிழ்த்திமிர் அடங்காது
எங்கு சென்றாலும்
எம் மாவீரக்கடவுள் நினைவுகள்
நீங்காது!
காலத்துக்கு காலம் நிறம் மாறும்
பச்சோந்திகளின் வம்சமல்லடா
நாங்கள்!
நேருக்கு நேர் நிற்கும் நெறிபுரளா
கொள்கையர் வம்சமடா!
இது
நீதிக்காக நெடுந்தூரம் பயணிக்கும்
அக்கினிக் குஞ்சுகள்
கூட்டமடா!
யாருக்கும் அடி தொழா
பிரபாகரன்
பிம்பமடா!
முள்ளிவாய்க்காலை மறந்து
அள்ளி வீசிய கந்தகக் கனலைக் கடந்து!
கொழுந்து விட்டெரிந்த நெருப்பில்
மாண்டுபோன மக்களை மறந்து!
நீண்டு படுத்துறங்க
உப்பில்லா பண்டத்தை
உண்ணும்
உணர்வற்ற சடலங்கள் அல்ல
நாங்கள்!
உரிமைக்காய் உண்மையாய் நின்று!
உலக மனச்சாட்சியை தட்டிக்
எழுப்பும்!
காந்தள் பூக்களின் காதலர்
நாங்கள்!
தூயவன்

No comments

Powered by Blogger.