திமுக, பாஜக தவிர யாருடனும் கூட்டணி அமைப்போம்!

திமுக, பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும், சசிகலா தனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தித் தாளுக்கு இன்று (நவம்பர் 7 ) அளித்துள்ள பேட்டியில்தான் தினகரன் இதைத் தெரிவித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ...

தகுதி நீக்க வழக்கில் அப்பீல் செய்வது என்று முடிவெடுத்த நீங்கள் ஏன் திடீரென அம்முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அன்றே நான் இதுபற்றி 18 பேரிடமும் ஆலோசித்து முடிவெடுப்பதாக சொன்னேன். அதன்படியே ஆலோசித்ததில் அனைவரும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள். அதேநேரம் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், ‘நாம் இதை இப்படியே விட்டுவிட்டால் சபாநாயகர் செய்தது நியாயம் என்று ஆகிவிடும். அதனால் ஒரு சிலராவது அப்பீல் சென்று சபாநாயகரின் முடிவு சட்டவிரோதம் என்று நிரூபிக்க வேண்டும் ‘ என்று கூறினார்கள். ஆனால் இறுதி ஆலோசனையில் மேல்முறையீடு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கனவே நாங்கள் இதுபற்றி நீதிமன்றத்துக்கு சென்றதால்தான் அவர்களின் அரசுக்கு 12 மாதங்கள் அவகாசம் கிடைத்தது. நீதிமன்றத்துக்கு மீண்டும் செல்வதன் மூலம் அரசுக்கு மேலும் அவகாசம் கிடைத்துவிடும் என்பதாலேயே மக்கள் மன்றத்தை சந்திக்க முடிவெடுத்தோம்.

கூட்டணி பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நீங்கள் நேரம் கேட்டதாக தகவல் வந்ததே?

இல்லை. நான் அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்காக முயற்சி எடுக்கவும் இல்லை, வாய்ப்புகளை அடைக்கவும் இல்லை. தமிழகத்திலுள்ள மாநிலக் கட்சிகள் சில எங்களோடு கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். நான் அவர்களோடு பேசியிருக்கிறேன். ஆனால் எந்த தேசியக் கட்சியோடும் இதுவரைக்கும் பேசவில்லை.

கூட்டணி பற்றி உங்களால் ஒரேயடியாக மறுத்துவிட முடியுமா?

நான் திமுகவோடு, பாஜகவோடு செல்ல முடியாது. அது அரசியல் தற்கொலை முடிவாகப் போய்விடும். ஆனால் மற்றவர்களைப் பற்றி நான் மறுப்பதற்கில்லை. அது காங்கிரஸாக இருக்கட்டும், இடது சாரிகளாக இருக்கட்டும், மாநிலக் கட்சிகளக இருக்கட்டும். ஒருவேளை நாங்கள் தனித்தே களமிறங்கினால் தேர்தல் முடிவுகள் எங்களுக்கே சாதகமாக வரும்.

உங்களுக்கு எந்த கொள்கையும் இல்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்களே?

மக்கள் நலன் ஒன்றே எங்கள் கொள்கை. அதைவிட சிறந்த கொள்கை ஒன்று இருக்கிறதா? தற்போதைய அரசு மக்கள் விரோத அரசு, அது பதவியில் இருப்பதற்கு லாயக்கற்றது. அதை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே இப்போது எங்களின் பெரிய கொள்கை.

சசிகலாவை சிறைக்குச் சென்று அடிக்கடி சந்திக்கிறீர்களே... என்ன விவாதிக்கிறீர்கள்?

அரசியலில் எனக்கு 30 வருட அனுபவம் இருப்பது சசிகலாவுக்குத் தெரியும். அதனால் எனது செயல்பாடுகளுக்கு அவர் முழு அனுமதி தந்திருக்கிறார். அவரை சந்திக்கும்போதெல்லாம் தற்போதைய அரசியல் நிலவரங்களையும், நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் விவாதிப்போம். அண்மையில் அவரை சந்தித்தபோது, இருபது தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு சசிகலா, இவர்கள் (எடப்பாடி, பன்னீர்) இடைத்தேர்தலை நடத்த விடமாட்டார்கள். தள்ளிப்போடுவதிலேதான் குறியாக இருப்பார்கள்’ என்று தன் அரசியல் கணிப்பைக் கூறினார்” என தன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் தினகரன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.