சீனாவுடன் வர்த்தகம்: கவலையில் இந்தியா!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.


2017ஆம் ஆண்டில் இந்தியா - சீனாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 18.63 விழுக்காடு உயர்ந்து 84.44 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 51 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தப் போக்கை சரிசெய்து இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வாதவன் கூறியுள்ளார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச இறக்குமதி கண்காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ள அனுப் வாதவன் சீனாவின் வர்த்தகத் துறைக்கான துணை அமைச்சர் வாங் சோவென்-ஐ நவம்பர் 6ஆம் தேதி சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பது குறித்து அனுப் வாதவன் அப்போது கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து அதிகளவில் மாதுளை மற்றும் சோயா இறக்குமதி செய்வது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியா - சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்தி வந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்தே வருகிறது. இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய மருந்துப் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இந்தியாவுக்கு வாய்ப்பை அதிகரித்து தர வேண்டுமென்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.