சாதனை சதத்துடன் தொடரை வென்ற இந்தியா!

ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். மறுமுனையில் ஷிகர் தவன் நிதானமான ஆட்டத்தைத் தொடந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஃபீல்டிங் நேற்றைய போட்டியில் படுமோசமாக இருந்தது. ஷிகர் தவன் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை அந்த அணியினர் வீணடித்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் 43 ரன்கள் எடுத்த தவன் ஃபேபியன் அலென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பந்த் 5 ரன்களுக்கு வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த ரோஹித் ஷர்மா டி20 அரங்கில் அவரது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டி20 அரங்கில் நான்கு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கடைசி கட்டத்தில் லோகேஷ் ராகுல் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
இதனைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.