ஜிம்பாப்வேயின் சரித்திர வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என வங்கதேசம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஸில்ஹெட் நகரில் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸீன் வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் ஆடிய வங்கதேசம், ஜிம்பாப்வேயின் மிரட்டலான பந்துவீச்சு தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு சுருண்டது. 135 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்ஸைத் துவக்கிய ஜிம்பாப்வே, 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் வங்கதேசத்தின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் துரத்திய வங்கதேசம் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் நேற்றைய (நவம்பர் 6) நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 169 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி டெஸ்ட் அரங்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியையும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நவம்பர் 11ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.
Powered by Blogger.