டிஜிட்டல் திண்ணை: சர்காருக்கு எதிராகப் போராட்டம் வேண்டாம் - அதிமுக முடிவு!

நடிகர் விஜய் தனது இளம் ரசிகர்கள் மீது சிகரெட் பழக்கத்தைத் திணிக்கிறார் எனப் பசுமைத் தாயகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள் இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகள் - சிறுவர்கள் மீது சிகரெட் பழக்கத்தைத் திணிக்கும் திட்டமிட்ட சதி ஆகும். இதற்காக நடிகர் விஜய்யும் இயக்குநர் முருகதாசும் பெரும் பணத்தை லஞ்சமாகப் பெற்றிருக்கக்கூடும்!
இந்தியாவில் புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 72% திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன. திரைப்படங்களில் வரும் காட்சியைப் பார்த்துத்தான் 53 விழுக்காட்டினர் புகைபிடிக்கக் கற்றுக் கொள்கின்றனர் என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்திய சுகாதார அமைச்சராக இருந்த போது புகையிலை தீமையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சி குறைந்தது 22 காட்சிகளில் (scenes) வருகிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு விளம்பரமாக இருக்கிறது. அதாவது, நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சியை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் - ஒவ்வொரு காட்சியும் ஒரு நுட்பமான விளம்பரக் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டை திறப்பது, அதிலிருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைப்பது, புகையை விடுவது என அனைத்தும் நுட்பமாக அண்மைக் காட்சிகளாக (close-up) தயாரிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
படத்தின் கதைக்கும் புகை பிடிக்கும் காட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியுள்ள அவர், “பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் புகைபிடிப்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தின் நடுவே நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. இது குற்றச்செயல் ஒன்றை சாதாரணமாகக் காட்டமுயலும் (Normalization) சிகரெட் நிறுவனங்களின் சதி ஆகும்.
திரையரங்குகளில் ரசிகர்கள் பெயரில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் பெரும்பாலானவை நடிகர் விஜய் புகை பிடிக்கும் படத்துடன் வைக்கப்பட்டுள்ளன.
எனவே, சிகரெட் நிறுவனங்களின் அப்பட்டமான விளம்பரம் சர்கார் படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் இதற்காக சிகரெட் நிறுவனங்களிடம் சட்ட விரோதமாகப் பணம் பெற்றிருப்பார்கள் என்பது உறுதி.
திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் இளைஞர்களின் மானசீக வழிகாட்டிகளாக தோன்றுகிறார்கள். சிறுவர்கள் அவர்களுடன் நேருக்கு நேர் பழகுவது போன்ற மானசீக உணர்வுகளை பெறுகின்றனர். நடிகர்கள் பின்பற்றும் பழக்கங்களை சிறுவர்களும் பின்பற்றத் தொடங்குகிறார்கள். எனவே தான், சிகரெட் நிறுவனங்கள் திட்டமிட்டு நடிகர்கள் மூலம் புகைபிடிக்கும் பழக்கத்தைத் திணிக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.
தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் இளம் சிறார்களை ரசிகர்களாகக் கொண்ட முன்னணி நடிகர் விஜய். எனவே, இளம் சிறார்களையும் குழந்தைகளையும் இளைஞர்களையும் சிகரெட்டுக்கு அடிமையாக்கும் நோக்கில், சிகரெட் நிறுவனங்கள் திட்டமிட்டு நடிகர் விஜய்யை மரணத்தின் தூதுவராக மாற்றியுள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.