பிரித்தாள்வதைத் தோற்கடிக்கும் முஸ்லிம் அரசியல் கூட்டு!

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் வலியுறுத்தி வந்த ”முஸ்லிம்களின் அரசியல் கூட்டுப்பலம்” உருவாகுவதற்கான சிறந்த  காலம் கனிந்து வருவதன் ஆரம்பத்தையே முஸ்லிம் காங்கிரஸ் – மக்கள் காங்கிரஸ் தலைமைகளின் தற்போதைய ஒற்றுமை வெளிப்படுத்துகின்றது.


மர்ஹூம் அஷ்ரப் 1998 – 07 – 05 ஆம் திகதி தினகரன் வார மஞ்சரிக்காக எனக்கு வழங்கிய செவ்வியில் உந்தப்பட்டவனாக இந்தப் பத்தியை  எழுதுகின்றேன்.

”வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் மக்களுடனும் வடக்கு, கிழக்குக்கு வெளியில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ்  மக்களுடனும் வடக்கு, கிழக்குக்கு வெளியில் பெரும்பான்மையாக வழ்கின்ற சிங்கள மக்களுடன் வாழ்கின்ற ஒற்றுமையை வளர்த்தெடுப்பது  முஸ்லிம்களின் அவசியக் கடமையாகும். ஆனால் இவ்வொற்றுமையானது எவ்வகையிலும் பெரும்பான்மைக்குத் தலை வணங்குகின்ற போக்காகவோ, அரசியல் அதிகாரத்துக்கும் ஆயுத அதிகாரத்துக்கும் சரணடைகின்ற வெளிப்பாடுகளாகவோ இருக்க அனுமதிக்க முடியாது.

தலைவணங்குவதும் சரணடைவதும் எந்த வகையிலும் சமத்துவமான இன சமூக ஐக்கியத்துக்கு வழிகாட்டப் போவதில்லை. முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கு வித்திடப்போவதுமில்லை.” இவ்வாறு மர்ஹூம் அஷ்ரப் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இதை இப்போதைய சூழ்நிலையிலாவது முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொண்டதில் சமூக ஆர்வலர்களுக்கு அளவு  கடந்த மகிழ்ச்சி. இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக ஒற்றுமை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும்ரை தொடரவேண்டும். இதுதான் எம்மைப் பிரித்தாள முனையும் எதிரிகளுக்கு நாம் வழங்கும் பதிலடி.

உண்மையில் முஸ்லிம் கட்சிகளைப் பிரித்து வைத்திருப்பது அதிகார மோதல்களே. மாறாகக் கொள்கை அளவில் இக்கட்சிகளுக்கு இடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. இருந்திருந்தால் ரணிலைக் காப்பாற்றும் விடயத்தில் இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டிருக் காது. நீ முந்தியா? அல்லது நான் முந்தியா? என முண்டியடித்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று ஒருவரையொருவர் வீழ்த்தும் தந்திரங்களில் இறங்கியிருப்பர். ஆனால் ஐந்து வருடங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஜனநாயகச் சமரில் இத்தலைமைகள் ஒன்றித்து விட்டமை மகிழ்ச்சியே.

மட்டுமன்றி ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் கட்சிகளை விலை பேச முடியாதென்ற தத்துவமும் இந்த ஒற்றுமையிலும், விடாப்பிடியிலும் வெளிப்படுகின்றன. ரணில் நமக்கு மாமனும் இல்லை, மஹிந்த மச்சானும் இல்லை, மைத்திரி சாச்சாவும் இல்லை. சிறுமான்மை மக்களின் ஆணை மீறப்பட்டமையே நமது பிரச்சினை.

இனி வரும் எந்தத் தேர்தல்களையும் எதிரணியில் இருந்தவாறு எதிர்கொள்வதற்கு இக்கட்சிகள் தயாரென்றால் இவர்களுக்குப் பின்னால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அணி திரண்டுள்ளதாகவே ஊகிக்க வேண்டும்.

கடந்த தேர்தலிலும் மிகப்பெரிய அரசியல் சக்தியான ராஜபக்ஷ கம்பனியை மக்கள் பலம் கொண்டு எதிர்த்துத் தோற்கடித்த துணிவிலே, இக்  கட்சிகள் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயலையும் எதிர்க்க களம் இறங்கியுள்ளன.

இவ்வாறு ஒன்றுபட்ட சக்தியாக முஸ்லிம் அரசியல் வளருமானால் முஸ்லிம் புத்திஜீவி களையும் அரசியலுக்குள் உள்வாங்க முடியும். துறைசார்  நிபுணர்களான பல முஸ்லிம்கள் அரசியலுக்கு வர ஆசையுடன் உள்ளபோதும் வாக்குகளுக்காகக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெறும் குடுமிச் சண்டைகள், சக்களத்திச் சச்சரவுகளுக்கு அஞ்சியே இப்புத்திஜீவிகள் ஒதுங்கியுள்ளனர்.இவர்களை உள்ளீர்க்க வேண்டுமானால் முஸ்லிம்  தலைமைகளுக்கு இடையிலான தலைமைத்துவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

தேசிய அரசியலில் ஏற்பட்ட கொதி நிலையைத் தணிப்பதற்கும், மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைகளைப் பாதுகாப்பதற்கும் நிறைவேற்று  அதிகாரம், பாராளுமன்ற அதிகாரங்களை, ஒன்றுபட்டு எதிர்க்க முடியுமென்றால், சமூக விடுதலை,தேசிய இனம் என்பதற்கான அங்கீகாரங்களைத் தேசிய, சர்வதேச ரீதிகளில் வென்றெடுக்க இத்தலைமைகளால் ஏன் ஒன்றுபட முடியாது? இதுவே முஸ்லிம் புத்திஜீவிகளின் மத்தியில்  இக்கட்சிகளின் ஒற்றுமை ஏற்படுத்தியுள்ள கேள்விகளாகும்.

தேர்தல் காலங்களில் வெவ்வேறு மேடைகளில் தோன்றினாலும் கொள்கைகளில் இக்கட்சிகளுக்கு இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை.  வடக்கு,கிழக்கு மாகாணங்களின் நிர்வாகம், எதிர்காலம் என்பன தனித்தனியாக பிரிந்திருக் க வேண்டும்.இது பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாக அறிவித்துள்ளது.

வடக்கு.கிழக்கு மாகாணங்களைப் பிரித்தல் என்ற மக்கள் காங்கிரஸின் கொள்கையிலே ஜனாதிபதியும் உள்ளார். அவ்வாறானால் ஏன் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன் மஹிந்த, மைத்திரி அரசுக்கு ஆதரவளிக்கவில்லை? இதற்கும் பல பின்னணிகள் உள்ளன.

முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலான மதவிரோத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட 2013 மற்றும் 2014  காலங்களில் மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரம் எதையும் பேசாமல் மௌனமானது. இதனால் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு கேள்விக்கு  உள்ளாகி, அடிப்படை உரிமைகள் அச்சுறுத்தப்பட்டன. இவ்வச்சம் நிறைந்த சூழல்களைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரச்சாரங்களை கடுமையாகத் தீவிரப்படுத்திய மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் ஆகியோர் பௌத்த கடும் போக்கு, மதவிரோத சிந்தனையுள்ள ராஜபக்ஷ நிர்வாகத்தைத் தோற்கடிக்க முஸ்லிம்களிடம் ஆணைக் கோரினர். இவர்களின் கொள்கைகளை ஏற்ற முஸ்லிம்கள் இத்தலைமைகளுக்குப் பின்னால் அணி திரண்டு மஹிந்தவின் சர்வாதிகாரப் போக்கை தோற்கடிக்க ஆணை வழங்கினர்.

தற்பொழுது மக்கா சென்றுள்ள இரு கட்சி உறுப்பினர்கள்
தற்பொழுது மக்கா சென்றுள்ள இரு கட்சி உறுப்பினர்கள்

இந்தச் சமூகம் வழங்கிய இந்த ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால மீறிவிட்டார் என்பதே முஸ்லிம் தலைமைகளின் ஆதங்கம். ஆகக் குறைந்தது ஒரு ஆலோசனையாவது நடத்தி இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும்.

சபாநாயகர் கருஜெயசூரிய, சஜித்பிரேமதாச ஆகியோருடன் பிரதமரை மாற்றுவது தொடர்பில் ஆலோசிக்க முடியுமென்றால் நல்லாட்சி அரசு  உருவாகுவதற்கு ஒத்துழைத்த, ஒப்பமிட்ட சிறுபான்மைக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காதது ஏன்? அவ்வாறு கலந்தாலோசித்து இருந்தாலும் மஹிந்த மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்களைத் திடீரென உதறி எறிந்து விட்டு மஹிந்தவுடன் ஓடிச் சென்று ஒட்டிக் கொள்வது,  தலைமைகளின் இமேஜைப் பாதிக்கும். வெளிநாடுகளிலும் இது வேறு பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தலாம். தேர்தல் காலங்களில் எதைப் பேசினாலும்  ஆட்சி, அதிகாரங்களில், ஒட்டிக் கொண்டால் போதும். உரிமையாவது, சமூகமாவது இதுதான் முஸ்லிம் அரசியல் என்ற அரசியல் பிம்பம்  வெளிநாடுகளில் ஏற்படக் கூடாது.

தொப்பி புரட்டிகள், திசைமாறிகள், சந்தர்ப்பவாதிகள் என்ற பெயரிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்  என்பன தெளிவாக உள்ளன. பேரம்பேசுவதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தையும் பொருட்டுத்தாது இதற்காக மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கப்  பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு மக்களிடம் பெற்ற ஆணையே,அரசுடன் சேர்வதற்கான இவர்களுக்கு உள்ள முட்டுக் கட்டைகள். ஆனாலும் அரசுடன் இணைவதா? அல்லது அரசை எதிர்ப்பதா? எது வெனினும் ஒருமித்த நிலைப்பாட்டிலே இவ்விரு தலைமைகளும் உள்ளமை பாராட்டப்பட  வேண்டும்.

இவ்விடயத்தில் சற்று அதிக விட்டுக்கொடுப்புடன் மக்கள் காங்கிரஸே செயற்படுகிறது. தமது கட்சிக்குச் சார்பான நிலைப்பாட்டில், ஜனாதிபதி  செயற்படும் நிலையிலும் அரசின் பக்கம் அமைச்சர் ரிஷாட் தாவாதுள்ளார். முஸ்லிம் சமூகத்தலைமைகள் இனிமேலாவது ஒன்றுபடவேண்டும்  என்பதற்கான அவரின் தியாகங்களே இவை. இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸைத் தனிமைப்படுத்தி விட்டு ஓடிச் சென்று அமைச்சைப்  பெறுவதற்கான வாசல்கள் திறந்தே கிடக்கின்றன. ஆனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு அவ்வளவு இலகுவாக அரசுடன் சேர்வதில் சிக்கல்கள்  இல்லாமலில்லை. வடக்கு,கிழக்கு இணைப்பா? அல்லது பிரிப்பா? ஏதுவென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இது வரை தெளிவாக, வாய்  திறக்கவில்லை. உண்மையில் இவ்விடயத்தைப் புரிந்து கொள்வதில் பலரும் சிரமப்படுகின்றனர். இருப்பினும் முஸ்லிம் கட்சிகளின் இந்த ஒற்றுமை  தொடர்ந்தும் நிலைக்குமானால் முஸ்லிம் சமூக ஒற்றுமையும் சாத்தியமாகும். (ஸ)

– சுஐப் எம் காசிம் –

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.