விஸ்வாசம் நடனக்கலைஞர் உயிரிழப்பு: சங்கம் விளக்கம்!

நடன கலைஞரின் உடலை புனேயிலிருந்து சென்னைக் கொண்டுவர நடிகர் அஜித் உதவி செய்தாரா, என்பதை நடன கலைஞர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.


நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்கான பாடல் காட்சி ஒன்று புனேயில் எடுக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பின் போது ஓ.எம். சரவணன் என்ற நடன கலைஞரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் அவர், உடனடியாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை நடந்துகொண்டிருந்தபோதே சரவணன் உயிரிழந்தார். உயிரிழந்த சரவணனின் உடல் புனேயிலிருந்து சென்னைக்கு அனுப்பும் ஏற்பாடுகள் முழுவதையும் அஜித் செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நடனக் கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளர் செந்தில் இன்று (நவம்பர் 8) அளித்துள்ள விளக்கத்தில், “அஜித் சார் நடித்துக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல் காட்சிக்காக ஒரு ஐம்பது நடனக் கலைஞர்கள் புனே சென்றிருந்தனர். போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஓ.எம். சரவணன் உயிரிழந்துள்ளார். அவங்க ஷூட்டிங் போன இடம் போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமம். அஜித் சார் படம் என்பதால் அவரே சொந்த செலவில் ஃபிளைட் புக் செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். சாலை வழியாக வர வேண்டும் என்றால் மூன்று, நான்கு நாட்கள் ஆகியிருக்கும்.

மேலும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடியும் வரை கூடவே இருந்து அங்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொடுத்துள்ளார். மறு நாள் சென்னை வந்ததும், எங்கள் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து அவரது உடலை அடக்கம் செய்தோம். சரவணனுக்கு குடும்பம் என்று யாரும் இங்கு கிடையாது. ஓ.எம்.சரவணன் ஒரு சாய்பாபா பக்தர். வருடம் ஒரு முறை சீரடி சென்று வருவார். அஜித் சார் மிகப் பெரிய உதவி செய்திருக்கிறார். அவருக்கு எங்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.