ஜடேஜாவை ‘வார்ன்’ செய்த வார்ன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் தனது சுயசரிதையில் ரவீந்திர ஜடேஜா குறித்துக் கூறியுள்ள விஷயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் ஜாம்பவான்களாக அறியப்படும் வீரர்களுள் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன். லெஃப்டில் கையைக் காட்டி ரைட்டில் இண்டிகேட்டரைப் போடுவதுபோல ஸ்டெம்புக்கு எந்தப் பக்கமாக பந்தை வீசுகிறார் என இவரது பந்துவீச்சை கணிப்பதற்குள் தமது ஸ்டம்புகளைப் பறிகொடுத்த மட்டையாளர்கள் பலர். மாயாஜால சுழலுக்குப் பெயர்போன இவர் சர்ச்சைகளில் சிக்குவதிலும் சளைத்தவரல்ல.

2008ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட இவர் ஐபிஎல்லின் முதல் கோப்பையையும் கைப்பற்றினார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்த சுவாரஸ்ய சம்பவமொன்று வெளியாகியுள்ளது. நோ ஸ்பின் எனும் தனது சுயசரிதையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் ஷேன் வார்ன். அதில் பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் ராக் ஸ்டார் என அழைக்கப்பட்ட இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா குறித்த ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா இருந்தபோது பயிற்சிக்கு தாமதமாக வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தாராம். திறமையான வீரராக இருக்கிறார் ஆனால் இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுகிறாரே எனக் கருதி அதை மாற்ற முயற்சி செய்தாராம் வார்ன். அப்படியாக ஒரு நாள் அணி வீரர்கள் பேருந்தில் பயிற்சிக்குக் கிளம்பும்போது தாமதமாகவே வந்துள்ளார் ஜடேஜா.

இதனால் பயிற்சி முடிந்து பேருந்தில் அறைக்குத் திரும்பும்போது பாதி வழியில் ஜடேஜாவைக் கீழே இறக்கிவிட்டு மீதி தூரத்தை நடந்து கடக்கப் பணித்துள்ளார் வார்ன். இந்தச் செயலை சக வீரர் ஒருவர் எதிர்க்க அவரையும் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார் ஷேன் வார்ன். இப்படியாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள வார்னுக்கு தற்போது இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலவையாகக் கிளம்பியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.