சர்கார்: சட்ட ஆலோசனையில் அமைச்சர்!

சர்கார் திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்க ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

இலவச திட்டங்களை குறித்து தவறான பார்வையை முன்வைப்பதாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று பேட்டியளித்திருந்தனர். இது தொடர்பாக மேல்மட்ட ஆலோசனைக்கு பிறகு தயாரிப்பாளர், நடிகர், திரையரங்கு உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள சி.வி.சண்முகம் அறையில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனுடன் அமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்த ஆலோசனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
கோமளவல்லி யார்?
இலவச திட்டங்களைக் கடந்து ஜெயலலிதாவின் பெயர் பற்றிய சர்ச்சை பெரும் விவாதமாகியுள்ளது. படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் இயற்பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் போர் கொடி தூக்க அதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு சார்பில் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் சர்கார் பிரச்சினை குறித்து பேசினார், "தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர் உணர்வுகளை புண்படுத்தும் செயலை ஏற்கமுடியாது. அம்மா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு. இவர்கள் அம்மா இருக்கும் போதே இப்படி எடுத்திருந்தால் இவர்களது வீரத்தை மெச்சியிருப்போம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் போல் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலமும் முடியாது. ஒரே ஒரு எம்ஜிஆர் தான்” என்று கூறினார்.
ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி அல்ல என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தினகரன் இதை கூறியுள்ளார்.
“ஜெயலலிதாவின் பெயர் கோமளவல்லி என யார் சொன்னது? 2002-2003-ல் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கோமளவல்லி என பேசியிருந்தார்.
‘அப்போது, கோமளவல்லி என சொல்கிறார்களே.. நான் எந்த படத்திலும் அப்படி ஒரு கேரக்டரிலும் நடித்ததில்லையே.. அப்படி ஒரு கேரக்டர் நடித்திருக்கிறேனா?’ என ஜெயலலிதா என்னிடமே கேட்டிருக்கிறார். நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தால் நிச்சயம் எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.