ஜல்லிக்கட்டு: இன்னும் 7 மாதங்கள் விசாரணை!

ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என்று ஆணையத் தலைவரான முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 ஜல்லிக்கட்டு குறித்த விசாரணையை நடத்தி வரும் நீதிபதி ராஜேஸ்வரன், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பாக மேற்கு மண்டல விசாரணை ஆணையத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (நவம்பர் 8), அவர் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக 3 நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

“மேற்கு மண்டலத்தில் 247 மனுக்கள் வந்துள்ளன. கோவையிலிருந்து 56 மனுக்கள் வந்துள்ளன. 3 நாட்களும் கோவை மாவட்டத்தில் தான் விசாரிக்கப்படவுள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியது எனது பணியாகும். இது தொடர்பாக கோவையில் 56, நீலகிரியில் 11, ஈரோட்டில் 44, திருப்பூரில் 40, சேலத்தில் 50, நாமக்கல்லில் 16, கரூரில் 3, திண்டுக்கல்லில் 27, வத்தலக்குண்டுவில் 1 என்று 248 மனுக்கள் பெறப்பட்டன.

கோவைக்கு அடுத்தபடியாக மற்ற மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்படும். கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றாலும், நிர்வாகத்தைக் கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

அப்போது, ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதமாக நடைபெறுவதாகக் கூறுவது தவறு என்று தெரிவித்தார் ராஜேஸ்வரன். “உண்மையைக் கண்டுபிடிக்கத்தான் விசாரணை ஆணையம் இருக்கிறது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், விசாரணை ஆணையம் கண் துடைப்பு என்று சொல்லப்படுகிறது. அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதுதான் எங்கள் பணி. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது குறித்து அரசிடம்தான் கேட்க வேண்டும்.

கோவை, சேலத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை முடிந்துவிட்டது. சென்னையில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க, இன்னும் 7 மாதங்கள் ஆகும். ஏனெனில், இன்னும் 1,956 சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.