ஜோதிகா: ஆர்.ஜேவை தொடர்ந்து ஆசிரியை!

நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படபூஜை இன்று (நவம்பர் 14) சென்னையில் நடைபெற்றது.


பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தொடர்ந்து காற்றின் மொழி படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும்தான் வேண்டும் என்றில்லாமல் நிஜ வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ஜோதிகா, முன்பை விட தற்போது குடும்ப ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் , எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள இதற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த வார இறுதியில் தொடங்கும் இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பள்ளி ஆசிரியை எனக்கூறப்படுகிறது.

Powered by Blogger.