மாணவி தற்கொலை முயற்சி! திருமுல்லைவாயலில் பரபரப்பு!

சென்னை அடுத்த திருமுல்லைவாயல் அருகே அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி மகராசி. இவர்களுக்கு ஹேமமாலினி (16) மற்றும் 13 வயதில் மகள்கள் உள்ளனர். ஹேமாமாலினி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார்.


சுடலைமணிக்கும், பக்கத்து வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சுடலைமணி, திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் அதை ஏற்கவில்லை. எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுடலைமணிக்கும், பக்கத்து வீட்டாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், சுடலைமணி வெளியே சென்றார். இதற்கிடையில், பக்கத்து வீட்டுக்காரர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தனர். இதனால் அங்கு திருமுல்லைவாயல் போலீசார் சென்று விசாரித்தனர்.

 அப்போது சுடலைமணி வெளியே சென்று இருந்ததால், மகராசி மற்றும் 2 மகள்களிடம் போலீசார் விசாரித்தனர். அந்த நேரத்தில், திடீரென ஹேமமாலினி 3வது மாடிக்கு சென்று அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடியில் குதித்தார். இதையடுத்து போலீசார், உடனடியாக சிறுமியை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பரிசோதனை செய்ததில், இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து சுடலைமணி கூறுகையில், ‘பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தபோது போலீசார் அதை ஏற்கவில்லை. ஆன்-லைனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் ரோந்து போலீசார் 2 முறை என் வீட்டுக்கு வந்து எதற்காக பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை செய்கிறாய் என என்னிடம் கேட்டனர். நேற்று முன்தினம் தேதி மாலை நான் வீட்டில் இல்லாதபோது என் மனைவி, மகள்களை போலீசார் ஆபாச வார்த்தையால் திட்டினர். விபச்சார வழக்கு போடுவோம் எனவும் மிரட்டினர். இதனால் மனமுடைந்த எனது மகள் மாடியில் இருந்து குதித்து விட்டார்’ என்றார்.

Powered by Blogger.