தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்படலாம்-மனோ

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் அரச பயங்கரவாதம் தலைத்தூக்கியுள்ளதையே அடையாளப்படுத்தியிருப்பதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் குற்றம்சாட்டியுள்ளார்.


இந்த நடவடிக்கைகளால் தொடர்ந்தும் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் உள்நாட்டிலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படலாம் என்றும் எச்சரித்துள்ள மனோ, அவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவுமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக பாடுபட்டதாகவும் தெரிவித்த மனோ கனேசன், எனினும் அந்த நிலைமை இன்று தலைகீழாக மாறியுள்ளதாகவும் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக நீடித்த குழப்பங்கள் தொடர்பில் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வைத்து தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசனிடம் நாம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து., இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த குழப்பத்தால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது சபை நடவடிக்கைகளை முறையாகவும், அமைதியாகவும் முன்னெடுக்க முடியுமென நம்புகின்றீர்களா? என ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஐபிசி தமிழ் சார்பில் வினவினோம்.

இந்த சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற வளாகத்தில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த ராஜபக்ச தரப்பினர் பயங்கரவாதிகளைப் போல் நடந்துகொண்டாக குற்றம்சாட்டினார். 
Powered by Blogger.