கருணாநிதி தொகுதியில் ‘கைப்புள்ள...’ சசிகலா குடும்பத்திற்குள் சடுகுடு!

திருவாரூரில் தினகரன் யாரை நிறுத்தினாலும் நாம் அவரை தோற்கடிக்க வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறார் திவாகரன். ஆனால், அவர் ஒரு கைப்புள்ள அவரது கனவு பலிக்காது என்கிறார்கள் தினகரன் அணியினர்.


டி.டி.வி.தினகரன் அணியைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றம், திருவாரூருக்கு மட்டும்தான் புதிய வேட்பாளர்கள். மற்ற தொகுதிக்கெல்லாம் ஏற்கெனவே இருக்கும் ஆட்கள்தான். திருவாரூர் தொகுதி என்பது கருணாநிதியின் தொகுதி என்பதை தாண்டி மன்னார்குடிக்கு அருகே உள்ள தொகுதி என்பதால், டாக்டர் வெங்கடேஷை அங்கே நிறுத்தலாம் என்று தினகரன் கணக்குப் போடுகிறாராம். இது சம்பந்தமாக முக்கிய நிர்வாகிகளுடனும் தினகரன் பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் திவாகரனும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். ’’திருவாரூரில் தினகரன் யாரை நிறுத்தினாலும் நாம் அவரை தோற்கடிக்க வேண்டும். . நாம போட்டியிட்டு ஜெயிக்க முடியாது. ஆனால், வெற்றி தோல்வியை நாம நிர்ணயம் பண்ணணும். அதற்கு எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணணும்’’ என தன் ஆதரவாளர்களிடம் சொல்லிவருகிறாராம். இதுபற்றி திவாகரனுக்கு நெருக்கமான மன்னார்குடியை சேர்ந்த அவரது ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். ’’அதிமுகவுடன் திவாகரன் ரகசிய உறவு எதுவும் வைத்திருக்கவில்லை.

டி.டி.வி.தினகரனை விட அரசியலில் முன்னேற வேண்டும். மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் திவாகரன் தனிக்கட்சி துவங்கி செயல்பட்டு வருகிறார். ’எதிரிக்கு எதிரி நண்பன்’ என்பது போல திருவாரூரில் யார் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை. தினகரன் அணி தோற்க வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அதற்காக எடப்பாடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என்கிற மனநிலையில் இருக்கிறார்’’ என்கிறார். 
இதுகுறித்து தினகரன் அணியினர், ‘எங்களைப் பொறுத்தவரை திவாகரன் எப்போதும் ஒரு கைப்புள்ளதான். வடிவேலுவைப்போல் காமெடி செய்து வருகிறார். இப்போது எடப்பாடி அணியின் ’கைப்புள்ள‘யாக தன்னை காட்டிக் கொள்கிறார். அவர் எடப்பாடி அணி வேட்பாளரை ஆதரித்தாலும் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது’’ என்கின்றனர் அலட்சியமாக!
Powered by Blogger.