அனந்தி சசிதரன் இன்னமும் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் விலக்கப்படவில்லை!

தமிழ் மக்களுடைய நலன்களை சிந்திக்காமல் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கிவைத்திருப்பவர்கள்தான் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்கள் என தமிழ் மக்கள் நம்புவார்கள் என்பது பகல் கனவு மட்டுமே. அந்த கனவு நனவானால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற இயலாமல்போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தாமாக விலகி சென்று ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கியிருப்பவர்கள் கூட பொது தேர்தலில் களமிறங்குவது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் யார்? இவர்களுடைய நிகழ்ச்சி நிரல் என்ன? என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டிய தருணம் இதுவாகும். ஐயா சீ.வி.விக்னேஸ்வரனாக இருந்தாலும், திருமதி அனந்தி சசிதரனாக இருந்தாலும் இவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் விலக்கப்படவில்லை. தாங்களாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி இப்போது ஆளுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு காரணம் கேட்டால் கொள்கை பிரச்சினை என்பார்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை, என்பார்கள். ஆனால் உண்மையான காரணம் அவர்களுடைய பதவி ஆசை மட்டுமேயாகும்.

ஒரு பேச்சுக்கு அவர்களுடைய அவர்கள் கூறுவது உண்மை என நினைத்துக் கொண்டாலும் கூட தனித்தனியாக ஆளுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்து வைத்துக் கொண்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடிக்கவேண்டி உள்ளதா? ஆக இவர்களுடைய நோக்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதைக்கவேண்டும். தமிழ் மக்களுடைய வாக்கு பலத்தை சிதறடிக்கவேண்டும்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்ககூடாது. என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல். அதனை அவர்கள் மிக கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்தும் செய்வார்கள். இவர்கள் எல்லாம் மனத்தூய்மையாக தமிழ் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என நினைத்தவர்களாக இருந்தால் மாகாணசபையின் 5 வருட ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள்? என்பதை மக்களுக்கு பகிரங்கமாக கூறட்டும் பார்க்கலாம்“ என தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #sritharan #Kilinochchi #jaffna #TNA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.