நிர்மலாதேவி விவகாரம்; சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு கோரிக்கை

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆனால் நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து ஆளுநர் குறித்து செய்தி வெளியிடுகிறது ஆகையால் அவர்மீது 124 சட்டப்பிரிவின் படி கைது செய்யவேண்டும் என்று ஆளுநர் அலுவலகம் புகார் கூறி நக்கீரன் கோபாலை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததும் பிறகு நீதித்துறை அவரை கைது செய்ய மறுத்ததும் தெரிந்த கதைதான்.

ஆனால்,இன்று ஆளுநர் அலுவலகம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிடவேண்டும் என்றும் அப்போதுதான் உண்மை தெரியும் என்றும் மனுதாக்கல் செய்திருக்கிறது.
ஆளுநருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட்டு ஆளுநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிடச்சொல்வது பெரும் சந்தேகத்தை கிளப்புவதாக சமூக ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள்
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிடத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உண்மை வெளியாக வேண்டுமென்றால் அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும் ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சிபிசிஐடி தரப்பில் வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனடிப்படையில் சாட்சி விசாரணை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், மாணவிகளின் பெயர்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உள் விசாரணையை எப்படி நிறுத்த முடியும்? குற்றச்சாட்டு குறித்து உண்மையைக் கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், மாணவிகளின் பெயர்களை வெளியிட்ட பத்திரிகை, ஊடகங்களுக்கு எதிராக மனுதாரர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பற்றியும், அவர் சார்ந்துள்ள அமைப்பின் பதிவு மற்றும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


‘குற்றச்சாட்டு குறித்து உண்மையைக் கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா?’ என்று நீதிபதிகள் கேட்டது ஆளுநரையும் சேர்த்தா? என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.