ஆத்மாவில் உறைந்த வீரத்தின் குறியீடு

தமிழரின் இருப்பை உலகிற்குத் தெரியச்செய்ய உதிரத்தையும் உடலையும் உயிரையும் கரைத்தவர்கள் மாவீரர்கள். கார்த்திகை மாதம் தமிழர் அணுக்களைப் பிழிந்து கரைக்கும் ஆற்றலர்களின் நினைவு சுமக்கும் மாதம். பேதங்கள் ஏற்றத்தாழ்வுகளில்லாத உறவுக்கலவையை
திரட்டித்தந்தவர்களின் புனித மாதம். காற்றோடும் நெஞ்சுக்கூட்டோடும் உரசித்தழுவும் ஆத்மார்ந்த தழுவலின் கூட்டுச்சேர்வை மாவீரர்கள். தளபதிகள்  சிப்பாய்கள் என்ற பேதமற்ற பெருமிதத்தின் புனிதச்சொல் மாவீரர்கள்.

"அம்மா, அப்பா,அக்கா, அண்ணா ,தங்கைச்சி, தம்பி, மகளே! "என  அழைத்தவர்களின் உரிமைக்குரல்களை நெஞ்சறையில் நினைத்து நினைத்து எதிரொலிகளை ஏக்கத்தோடு தழுவித்துவண்டு கதறி நிமிரும் காவியப்பேரேட்டின் நினைவுகள் பதிந்த நாள்  மாவீரர் நாள்.

         தமிழீழத்தின் தாய்மையும் உறவுகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்து நெருங்கி கூடியுண்டு குதூகலித்த பெருவரலாற்றின் திருப்பு முனைகள் மாவீர்கள். பெற்றவள் தான் தாய் என்ற நிலைமாறி போராளிகள் ஒவ்வொருவரையுமே தான் பெற்ற பிள்ளையாக, தம்மோடு கூடப்பிறந்த அண்ணணாக, அக்காவாக, தங்கையாக, தோழியராக நேசிக்க வைத்தவர்கள் மாவீரர்கள்.

             மாவீரர்கள் தமக்கான நிலத்தையும் தம் மக்களுக்கான உரிமைகளையும் மறுத்தவர்களிடம் நியாயமான வழிகளில் உரிமை கிடைக்காத போது ஆயுதவழியில் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள். தமிழீழம் என்ற கனவைச்சுமந்து தலைமை காட்டிய பணியைச்சுமந்து இரத்தத்தையும்  உயிரையும்  கொடுத்த தியாகத்தின் ஆகுதியால் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டது ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு.

 கழுத்திலே நஞ்சுக்குப்பியோடு பகைவரின் பிடியில் சிக்கக்கூடாதென்று சாவைச்சுமந்து வாழும் காலத்து வசந்தத்தை புதைத்து
தமது சந்ததிக்காக தமது வாழ்வியலை அர்ப்பணித்த அதிசயக் கொடையாளர்கள் மாவீரர்கள்.

           கார்த்திகை மாதம்  மழைக்காலம். தேகத்தோடு சில்லிடும் மழைத்துளிகளிலும், குமிழ்ந்து சிரிக்கும் கார்த்திகைப்பூக்களிலும் , உடைந்து சிதறிய கல்லறைக்கற்களிலும் மாவீரக்குழந்தைகளின்  முகத்தைத்தேடும் வரத்தைக்கேட்கும் மாதம் மாவீரர் மாதமான கார்த்திகை மாதம்.
     
   யாழ்ப்பாண சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கிய சங்கர் என்ற விடுதலை வீரன்   விரிவுரையாளர் நித்தியானந்தன் வீட்டில்  தங்கியிருந்தார். அந்தவேளை சந்தேகத்தின் பெயரில் நிர்மலா நித்தியானந்தன் தம்பதியரின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்த போது அங்கிருந்து  தப்பிச்சென்ற வேளை வயிற்றில் காயமடைந்த சங்கர் என்ற போராளியை தமிழகத்திற்கு அவசர சிகிச்சைக்காக கடல்வழியாக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பயனளிக்காமையால் "தம்பி... தம்பி" என்ற இறுதி வார்த்தையோடு தமிழகத்தின் மதுரையில் சங்கர் அவர்களின் உயிர் கிட்டு அண்ணாவின் மடிமீது  அணைத்தபடி தமிழக மண்ணில் கலக்கிறது. அப்போது நேரம் மாலை 6.05.
   
      இறக்கும் போது எந்த ஒரு மனிதனும் " அம்மா... அம்மா .." என்றே அழைப்பது வழமை. இங்கு சங்கர் அண்ணா
    " தம்பி... தம்பி "
என அழைத்தபடி உயிர் விடுகிறான். தம்பி என அழைக்கப்பட்டவர் யாரெனில் எங்கள் அன்புத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே. அந்த வீரனின் உயரிய பாசத்தை மனதில் சுமந்த தலைவர் தனது பிறந்தநாளை அந்த மாவீரனின் மறைவின் பின் கொண்டாடியதில்லை. அந்த மாவீரனின் நினைவைச் சுமந்து வரும் மாவீரர் நாளில் அன்றைய நாள் முழுதும் உணவைத்தவிர்த்து வாழ்ந்து காட்டியவர் தலைவர். அவரைப் பின்பற்றி  போராளிகளும் மாவீர்நாளில் உணவைத்தவிர்த்து நோன்பிருந்து மாவீரரை வணங்கினர்.
   
        லெப்டினன். கேணல் சங்கர் வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்தவர். தமிழகத்தின் மதுரையில் வீரச்சாவடைந்த போது அவரை தமிழகத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்துப் பிள்ளையாக பதிவு செய்து பழ.நெடுமாறன் அவர்களின் துணையோடு அவர் அனுப்பிய கட்சித்தொண்டர்களோடு 27/11/1986 அன்று இரவு  பத்து மணிக்கு மதுரையில் உள்ள வில்லாபுரம் சுடுகாட்டில் அன்ரன் மாஸ்ரர், பேபி அண்ணா, தேவர் அண்ணா,கிட்டு அண்ணா ஆகிய மூத்த போராளிகள் சூழ்ந்து நின்று இறுதிமரியாதை செய்ய அப்பையா அண்ணாவால் வித்துடலுக்கு கொள்ளியிடப்பட்டது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்து விடைபெற்றான் முதல் மாவீரன் சங்கர்.
   
        1989 ஆம் ஆண்டு முதல் வீரச்சாவடைந்த  லெப்டினன் சங்கரின் நினைவு நாளில் அன்றுவரை வீரச்சாவடைந்த 1307  மாவீரர்களையும் நினைவு கூறும் நாளாக மாவீரர் நாள் முதன் முதலாக மணலாற்றுக்காட்டில் தலைவரும் போராளிகளும் தங்கி இருந்த புனிதபூமிப் பயிற்சிப்பாசறையில் நினைவு கூறப்பட்டது.

     1990 ஆம் ஆண்டு கலைபண்பாட்டுக்கழகத்தின் அன்றைய துணைப் பொறுப்பாளராக இருந்த தேவர் அண்ணா அவர்களின் தலைமையில்
 பொன். கணேசமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட மாவீரர் நாள் எப்படி நினைவு கூறுவது?  என்ற சிறிய விபரணக்குறும்படக்காட்சியின்  வழிகாட்டலோடு மக்கள் யாவரும் நள்ளிரவு 12.05 ற்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அன்று நள்ளிரவு யாழ்ப்பாணக் கோட்டையில் மாவீர்களுக்கான பொதுச்சுடரை பானு அண்ணா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிய போது புலிக்கொடியைப் பறக்க விட்டவரும் பானு அண்ணாவே.

     1991 ஆம் ஆண்டு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக பொன். தியாகம் அப்பா அவர்கள் பொறுப்பேற்று மாவீரர் நாள் நினைவுகளை அனுஸ்டிக்க வழிகாட்டியானார். இறுதிப் போர்வரை அவரே மாவீரர் பணிமனைப்பொறுப்பாளராகவும் விளங்கினார். 
      1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த கோப்பாயில் துயிலுமில்லம் அமைத்து மாவீரர்களுக்கு நினைவு கூறப்பட்டது. கோப்பாய்த்துயிலுமில்லமே தமிழீழத்தின் முதல் மாவீரர் துயிலுமில்லம் ஆகும்.
   
  துயிலுமில்லத்தில் இசைக்கப்படும் பாடலை எழுதியவர் தமிழீழக்கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்கள்.
கல்லும் கரைந்துருகும் பாடலது.

//" எங்கே எங்கே ஒருகனம் விழிகளை இங்கே திறவுங்கள்.
ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் .. "//

//தாயகக்கனவுடன் சாவினைத்தழுவிய
சந்தனப்பேழைகளே. இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினில் வாழ்பவரே.
உங்களைப்பெற்றவர் உங்களின் சகோதரர் உறவினர் வந்துள்ளோம். அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.//

உயிர்ப்பூட்டும் வரிகளோடு ஆன்மாவின் கடைசி அனுவரை அலசிப்பிழியும்  உணர்வுகளுக்கு வரிவடிவில் கவிபொழிந்தவனும் காணாமலாக்கப்பட்ட கனத்த வரலாற்றைச்சுமந்து பயணிக்கிறது ஈழத்தவரின் வரலாறு.

         மாவீரர் தினத்தை நினைவுகூறுவதற்கு தடைகளைப்போட முனைபவர்கள் தமிழர்கள் இதயத்தில் எழுந்திருக்கும் மாவீரச்செம்மல்களை நாம் வேற்று நாட்டிலிருந்து கூட்டி வந்த கூலிப்படை என நினைத்தனரோ?

      ஒவ்வொரு தமிழனின் அக்காவாக, அண்ணாவாக, தம்பியாக, தங்கையாக, மகளாக, மகனாக கூடிமகிழ்ந்த கூட்டுக்குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்பதை மறந்தனரோ.?

      ஒருநாட்டின் சிறுபான்மை இனத்தை அழிக்க கூட்டுச்சதியோடு கூடிப்பிணைந்த வல்லாதிக்கங்களை இறுதிவரை தாக்கியழித்த பெரும் மகாத்மாக்கள் மாவீரர்கள்.
     
         இதோ... எங்கள் தேசத்தில் இடிக்கப்பட்ட கல்லறைத்துகழ்களில் ....

அவர்கள் குருதிகுடித்து நிமிர்ந்தாடும் விருட்சங்களில்....

அவர்கள் இறுதி மூச்சை கலந்து தழுவும் காற்றில்.....

உயிரோடு உயிர்க்கலத்தில் சுமந்து பயணிக்கும் ஒவ்வொரு தமிழனிலும்.....
மாவீரர்கள் நிறைந்து கலந்துள்ளனரே.

எதிரிகளே.... !
ஒட்டுண்ணிகளே...!
எப்படி உங்களால் எந்த வடிவில்  தடைபோட முடியும்.?

மாவீரத்தை யாராலுமே தடைபோட முடியாது.
அது உணர்வுக்கலசம்.
உயிரின் ஓசை.
ஆத்மாவில்  உறைந்த வீரத்தின் குறியீடு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
23/11/2018(11.00pm)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.