முடங்கியதா சுகாதாரத் துறை?

தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதனால், ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும், உயிர்ப்பலி குறித்தும், பலவித

புள்ளிவிவரங்கள் வெளியாகி வருவதாகப் புகார் தெரிவிக்கின்றன எதிர்க்கட்சிகள். தமிழகச் சுகாதாரத் துறை முடங்கிவிட்டதா என்று கேள்வியெழுப்பிவருகின்றனர்.
இதற்கு தமிழகச் சுகாதாரத் துறை என்ன பதிலை வைத்திருக்கிறது? அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள் என்று அறியக் களத்தில் இறங்கினோம்.
வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் குறித்த விவரங்களை அறியும் நோக்கில், கடலூரைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் பால.கலைக்கோவனிடம் பேசினோம். “இந்த வைரஸ் பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும் பாதிக்கப்பட்ட நபரின் சளி, இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும். பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துவது ஒரு சாதாரண வைரஸ் கிருமிதான். அது எய்ட்ஸ், சார்ஸ், எபோலா போன்றதொரு கொடிய வைரஸ் கிடையாது. பொதுவாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்களைப் பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதாகத் தாக்கும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, இதற்கான தடுப்பு ஊசி போட வேண்டும்” என்றார்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் பலி எண்ணிக்கை உயர்வது குறித்து, கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். சுகாதரத் துறைச் செயலாளர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகச் சொன்னார் அவரது உதவியாளர். இயக்குநர் குழந்தைசாமியிடம் கேளுங்கள் என்றார். இயக்குநர் மீட்டிங்கில் இருப்பதாக அவரது அலுவலகத்தில் சொன்னார்களே என்றதும், ஒரு நிமிடம் லைனில் இருங்கள் என்று நம்மைக் காத்திருக்கச் சொன்னார். சில நிமிடங்கள் கழித்து, சுகாதாரத் துறை இயக்குநரின் நேர்முக எழுத்தரிடம் கேட்டால் புள்ளிவிவரங்களைக் கொடுப்பார் என்று தெரிவித்தார்.
சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியின் நேர்முக எழுத்தரைத் தொலைபேசியில் அழைத்தபோது, டெங்கு காய்ச்சலைக் கவனித்துவரும் இணை இயக்குநர் சரவணனைத் தொடர்புகொள்ளுமாறு கூறினார். பன்றிக் காய்ச்சல் விபரங்களைப் பற்றி இணை இயக்குநர் பிரேம்குமாரிடம் கேளுங்கள் என்றார். இரண்டு இணை இயக்குநர்களையும் தொடர்புகொண்டு கேட்டபோது, பின்னர் அழைப்பதாகப் பதில் கிடைத்தது. பல மணி நேரம் கடந்தும், இருவரிடமிருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீண்டும் இயக்குநர் குழந்தைசாமியைத் தொடர்புகொண்டபோது, கூடுதல் இயக்குநர் டாக்டர் வடிவேலனைத் தொடர்புகொள்ளுமாறு கூறினார். இதன் பாதிப்பு பற்றி நேரடியாகப் பேசத் தொடங்கினார் வடிவேலன். “டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் 2,200 பேர். இதில் இறந்துபோனவர்கள் 5 பேர். பன்றிக் காய்ச்சலால் 700 பேருக்குப்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 10பேர் பலியாகியுள்ளனர். டெங்கு கொசுவை அழிக்கத் தமிழகம் முழுவதும் 25,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பயப்பட வேண்டாம் பீதியடைய வேண்டாம். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருந்தபோது, வரும் முன் காப்போம் என்று பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பினோம். அதற்கு, “தடுப்பு ஊசி எல்லாம் நேரத்திலும் சாத்தியமாகாது” என்று பதிலளித்தார் வடிவேலன்.
சிறிது இடைவெளிக்குப் பின்னர், பன்றிக் காய்ச்சல் பிரிவு இணை இயக்குநர் பிரேம்குமாரைத் தொடர்புகொள்ள முடிந்தது. “தமிழகம் முழுவதும் 2018 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரையில் 783 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது; 15 பேர் இறந்துள்ளனர். நீண்டநாட்களாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கிட்னி பிரச்சினை உள்ளவர்கள், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதில் உண்டு” என்றார்.
பன்றிக்காய்ச்சலைத் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்றபோது, இது ஒரு நோய்த்தொற்று என்பதால் உடைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது என்றார். வெளியில் சென்று வந்ததும் குளிப்பது அல்லது கை, கால்களை சோப்பு தேய்த்துக் கழுவுவதால் பாதிப்பு குறையும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். “பன்றிக் காய்ச்சல் சோதனை செய்வதற்கு, தமிழகம் முழுவதும் 25 மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 16 மையங்கள் தனியார்வசமும், 9 மையங்கள் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. தனியார் மையங்களில் இவ்வாறு சோதனை செய்ய ரூ.3,750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி அதிகமாக வசூல் செய்யும் தனியார் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் பிரேம்குமார்.
இதன் பின்னர், டெங்கு காய்ச்சல் பிரிவு இணை இயக்குநர் சரவணனை மீண்டும் தொடர்புகொண்டோம். அப்போது, முதன்மை பூச்சியியல் வல்லுநர் குமார் விளக்கம் கொடுத்தார். “கடந்த 10 மாதத்தில் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். டெங்கு கொசுவை ஒழிக்க 9 மண்டலங்களில் பூச்சியியல் மையங்கள் ஏற்படுத்தி, குழுக்கள் அமைத்து, டெங்கு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம்.
டெங்கு சோதனைக்கான சாதனங்களைத் தமிழகம் முழுவதும் அரசு தலைமை மருத்துவமனைகளில் சப்ளை செய்துள்ளோம். ஒரு கிட் மூலமாக 96 பேருக்கு டெஸ்ட் எடுக்கலாம்” என்று அவர் கூறினார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்பில் நீர்ச்சத்து குறையாமலிருக்கும் நோக்கில் நில வேம்பு கஷாயம், பப்பாளிச் சாறு கொடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.
தவிர்க்கும் முறைகள்
“வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொட்டை மாடியில்
தேங்காய் ஓடு, பழைய டயர், பிரிட்ஜ் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது. ஊர் ஊராகக் கொசு மருந்து அடித்துவருகிறோம்” என்று தெரிவித்தார் குமார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், நாகை மாவட்டங்களின் பல இடங்களில் கொசு மருந்து அடிக்காதது குறித்துக் கேட்டோம். உங்கள் தகவல்களை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்று கூறினார்.
கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தபோது, டெங்கு சிகிச்சைக்கான தனிவார்டு கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனார். நோயாளிகள் பலன்பெறும் வகையில் எவர்சில்வர் பாத்திரங்களில் கஞ்சி, வெந்நீர், நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைத் தனித்தனியாக வைத்து அசத்தினார் செவிலியர் கண்ணகி. மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்தித்ததும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் ராதாகிருஷ்ணன். அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் இறந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் இறந்துள்ளதாகவும் முரண் நிறைந்த புள்ளிவிவரங்களைச் சொன்னார். இதுவரை 2,700 பேருக்குத்தான் டெங்கு காய்ச்சல் வந்துள்ளது என்றும், கடந்த ஆண்டில் 23,000 பேருக்கு டெங்கு வந்தது என்றும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு மிகக் குறைவு என்றும் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.
இதுபற்றி நம்மிடம் பேசினார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவ அதிகாரி. அவரிடம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை என்று பாமக துணைப் பொதுச்செயலாளர் தாமரைக்கண்ணன் போராட்டம் செய்தது பற்றிக் கேட்டோம்...
“ஆட்சி ஸ்ட்ராங்கா இருந்தால்தானே அதிகாரிகள் பயத்தோடு செயல்படுவார்கள். இதுவரை எத்தனை ரிவ்யூ மீட்டிங் நடத்தியிருப்பார் சுகாதாரத் துறை அமைச்சர்? முன் ஏர் ஒழுங்காகப் போனால்தான் பின் ஏர் ஒழுங்காகப் போகும். தலைமை எப்படியோ, அப்படித்தான் கீழேயும். பணம் இருந்தால் போஸ்டிங் வாங்கலாம், டிரன்ஸ்பர் கேன்சல் செய்யலாம் என இருந்தால், எந்த அதிகாரி பயப்படுவார்?
இணை இயக்குநர் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளர், ஆர்.எம்.ஒ, தலைமை செவிலியர், பொதுப்பணித் துறை அதிகாரிகள் என ஒரு குழுவானது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பார்வையிடும். வார்டு சுத்தமாக இருக்கிறதா, லைட் எரிகிறதா, தண்ணீர் வருகிறதா, நோயாளிகளுக்கு என்ன குறை, ஊழியர்களுக்கு என்ன குறை என்று கேட்பார்கள். இப்போதுள்ள இணை இயக்குநர்கள் யாரும் ரவுன்ட்ஸ் போவதில்லை” என்று வேதனைப்பட்டார்.
தொடர்ந்து பேசியவர், “பீல்டில் உள்ள ஒரு அதிகாரி ஒரு புள்ளிவிபரம் சொல்கிறார். அதிகாரி ஒரு புள்ளிவிபரம் சொல்கிறார். இயக்குநர் ஒரு கணக்கு சொல்கிறார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறார். யார் சொல்வதை நம்புவது? இப்படியா உளறுவது? மேலதிகாரிகளுக்கும் கீழ் நிலை அதிகாரிகளுக்கும் இடையே சரியான தொடர்பு இல்லாமல் இடைவெளி ஏற்பட்டுள்ளது இப்போது தெரிகிறதா?” என்றார்.
மக்கள் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் வாரந்தோறும் ஆய்வுக்குச் சென்று நடவடிக்கை எடுத்தால்தான் மருத்துவ அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்வார்கள் என்று கூறியவர், அவர்கள் செல்வார்களா என்று கேள்வி எழுப்பினார்.
டெங்குவும் பன்றிக் காய்ச்சலும் தமிழகச் சுகாதாரத் துறையை முடக்கிவிட்டதா என்ற அரசியல் கட்சிகளின் கேள்விகளுக்கு, தமிழக அரசு என்ன பதிலைச் சொல்லப் போகிறது?
-காசி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.