முடிந்தால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக்காட்டுங்கள் – சம்பிக்க


நாடாளுமன்றத்தில் முடிந்தால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக்காட்டுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் (சனிக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்குதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டின் ஜனநாயகம், மக்களின் பாதுகாப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

கடந்த 26 ஆம் திகதி வெறும் 45 நிமிடங்களிலேயே பிரதமரை நீக்கி, அமைச்சரவையை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த இருவரும் அதிகார ஆசைக்காகவே இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

நடைபெற்றுவரும் வழக்குகளினால் தமது குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்றுதான் மஹிந்த நினைக்கிறார். அவருக்கு நாட்டு மக்கள் தொடர்பிலோ இந்த நாடு தொடர்பிலோ துளியேனும் அக்கரையில்லை. இதுதான் உண்மையாகும். அவரது குடும்பத்தை சிறைச்சாலைக்கு செல்லவிடாமல் தடுப்பதற்காவே தற்போது பிரதமர் நாற்காலியிலும் அமர்ந்துள்ளார்.

இன்று அந்தத் தரப்பினருக்கு ஒரு கட்சியில்லை. ஆனால், நாம் மக்களை நம்பியே அரசாங்கத்தை நடத்தினோம். அவர்கள் நினைத்துவிட்டார்கள் நாம் இந்த பயணத்தை இடை நிறுத்திவிடுவோம் என்று. ஒருபோதும் அதனை மட்டும் நாம் செய்ய மாட்டோம்.

புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி, 6 வருடங்களுக்கு இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றுதான் அந்தத் தரப்பினர் கருதினார்கள். இதுஎல்லாம் கனவில் கூட நடக்காது.

புலிகளுடனான போரின்போது நாம் தான் மஹிந்தவுக்கு உறுதுணையாக இருந்தோம். இதனை மறந்துவிட வேண்டாம். இன்று சபாநாயகருக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனினும், அவர் ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டார்.

மஹிந்த தரப்புக்கு ஆளும் தரப்பின் ஆசனம் வழங்கப்பட்டபோது நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். இதற்கெதிராக நாம் பெரும்பான்மையை இன்று நிருபித்துள்ளோம். அந்தத் தரப்பினருக்கு 113 உறுப்பினர்கள் இல்லை. அமைச்சர்கள் கூட நிலையில்லாமல் தான் இருக்கிறார்கள். நாம் எதற்கும் தயாராகவே இருக்கிறோம்.

உயர்நீதிமன்றிலும் நாம் வெற்றிப்பெற்றுள்ளோம். மஹிந்தவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் நிறைவேற்றி வெற்றிப்பெற்றுள்ளோம். எனவே, இன்று நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை மக்களுக்குக் கூறிக்கொள்கிறேன்“ என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.