பிரபல நடிகர் மீது #MeeToo புகார்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர் மீது, முன்னாள் மிஸ் இந்தியா எர்த் அழகியும், பாலிவுட் நடிகையுமான நிஹாரிகா சிங் பாலியல் புகார் கூறியுள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரச்சாரம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். பாலிவுட்டில் நடிகர் நானா பட்டேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி இந்தியாவில் மீ டூ பரப்புரையை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் பலர் மீடூ புகார்களை முன்வைத்தனர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்த மீ டூ விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டு சற்று தனிந்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் மிஸ் இந்தியா எர்த் அழகியும், பாலிவுட் நடிகையுமான நிஹாரிகா சிங், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதில், “நவாசுதீன் ஒருமுறை தனக்கு போன் செய்து தனது வீட்டின் அருகே இருப்பதாகக் கூறினார். அவரை எனது வீட்டிற்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அழைத்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த நவாசுதீன், ஒரு உலக அழகியோ அல்லது நடிகையோ தனக்கு மனைவியாக வேண்டும் என்ற கனவு இருப்பதாக் கூறினார். அவர் கூறியது வேடிக்கையாக இருந்தாலும் அந்த நேரத்தில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின் அவரிடம் இருந்து விலகிச் சென்றேன். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நேரடியாக தன்னுடன் இருக்க விரும்புவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அவரது ஆசைக்கு மறுத்ததை வைத்துக் கொண்டு, தன்னை ஒரு மோசமான நடிகை என்று பல கட்டுக்கதைகளை கூறி தனது திரை வாழ்க்கைக்கு பெரும் முட்டுக்கட்டையைப் போட்டார்” என நிஹாரிகா குற்றம்சாட்டியுள்ளார். நிஹாரிகாவிற்கு நேர்ந்த மீ டூ அனுபவத்தை அவரது சார்பாக பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நவாசுதீன் மட்டுமின்றி டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட விமான பணிப்பெண் அனிசியா பத்ராவின் கணவர் மயாங்க் சிங்வி, தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்டோர் மீதும் நிஹாரிகா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் குணசித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மாம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு அறிமுகமான இவர், தற்போது பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.